
பந்திங், ஜூன் 15 – தெலுக் பங்லிமா காராங் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய மண்டபத்தில் அண்மையில் சமய விழிப்புணர்வு நிகழ்ச்சியை முன்னிட்டு பக்தி மணம் கமிழும் வகையில் ஆன்மீக உரைகளும் அது தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகளும் இடம் பெற்றன.
சமூக ஒற்றுமையையும், ஆன்மீக வளர்ச்சியையும் மேம்படுத்தும் தலைப்பில் சமய சொற்பொழிவும் இடம் பெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பக்தர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
ஜூன் 13 ஆம்தேதி மாலை 5 மணி தொடங்கி இரவு 10 மணிவரை நடைபெற்ற இந்த நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடைபெற்றதால் பொதுமக்கள் மட்டுமின்றி பக்தர்களும் திரளாக கலந்துகொண்டு பயன் அடைந்தனர்.
இதனிடையே இந்திய சமுதாயத்தின் உரிமைகள், நலன்கள் மற்றும் அவர்களின் சமய நம்பிக்கைகளுக்கு ஆதரவாக செயல்படும் அரசியல் சக்திகளுடன் மட்டுமே MIPP எனப்படும் மலேசிய இந்தியர் மக்கள் கட்சி எதிர்காலத்தில் அரசியல் கூட்டணியை அமைத்துக் கொள்ளும் என இந்த நிகழ்ச்சில் கலந்துகொண்டு பேசியபோது அதன் தேசியத் தலைவர் புனிதன் தெரிவித்தார்.
தற்போது MIPP பெரிக்காத்தான் நேசனல் கூட்டணியில் தொடர்ந்து செயல்பட்டு வருவதாக குறிப்பிட்ட அவர், அண்மைக்காலமாக பல்வேறு அரசியல் தரப்புகளிடமிருந்தும் கட்சிக்கு அழைப்புகள் வந்துள்ளதையும் சுட்டிக்காட்டினார்.
இருப்பினும், எந்த அரசியல் கூட்டணியுடன் இணைவது என்பது குறித்து இறுதி முடிவு கட்சியினால் கலந்தாலோசிக்கப்பட்டப் பிறகே முடிவு எடுக்கப்படும் என அவர் தெளிவுபடுத்தினார்.
MIPP கட்சிக்கு 12 நாடாளுமன்றத் தொகுதிகளையும் 20 மாநில சட்டமன்றத் தொகுதிகளையும் வழங்க பெரிக்காத்தான் கூட்டணி தயாராக இருந்தபோதிலும் இந்தியர்களின் கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்பு, சமய உரிமைகள் மற்றும் சமூக முன்னேற்றம் ஆகியவற்றிற்கு யார் உண்மையாக உத்தரவாதம் அளிக்கிறார்கள் என்பதுதான் எங்கள் முடிவை நிர்ணயிக்கும் முக்கிய அம்சமாக இருக்கும் என அவர் குறிப்பிட்டார்.
கூட்டணி தொடர்பான இறுதி முடிவு எடுக்கப்பட்ட பின்னர் தேர்தல் இயந்திரத்தை முழுமையாக இயக்கி தேர்தல் பணிகளில் கட்சி ஈடுபடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.



