
கோலாலம்பூர், ஜூன்-17-1MDB நிதி ஊழல் வழக்கில் முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் ரசாக், தனது தவறுக்காக எவ்வித வருத்தமும் தெரிவிக்கவில்லை என உயர் நீதிமன்றம் மிகக் கடுமையான கருத்துக்களைத் தெரிவித்துள்ளது.
நேற்று வெளியான 800-க்கும் மேற்பட்ட பக்கங்கள் கொண்ட தீர்ப்பு அறிக்கையில், நீதிபதி Collin Lawrence Sequerah இந்த விவரங்களைக் குறிப்பிட்டுள்ளார்.
நஜீப் ரசாக், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவ வேண்டிய 1MDB நிதியத்தை, 21-ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய பணமோசடி ஊழலாக மாற்றியதாகக் நீதிபதி குற்றம் சாட்டியுள்ளார்.
நாட்டின் மிக உயரிய பதவிகளைப் பயன்படுத்தி, முறையற்ற பணப் பரிவர்த்தனைகளுக்கு அவர் அழுத்தம் கொடுத்ததாகவும், இந்த ஊழலால் மலேசியாவின் அனைத்துலக நற்பெயர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் நீதிபதி கூறினார்.
இதன் அடிப்படையில், நஜீப்புக்கு விதிக்கப்பட்ட 15 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 11.38 பில்லியன் ரிங்கிட் அபராதமும் முற்றிலும் நியாயமானது என்று நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது.
அத்துடன், இந்த நிதி நஷ்டத்தை நாட்டின் எதிர்கால தலைமுறையினர் அனுபவிக்க நேரிடும் என்றும் நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது.



