
சுங்கை பூலோ, ஜூன்-17 – சிலாங்கூர், சுங்கை பூலோவில் உள்ள ஒரு நீர் விளையாட்டு பூங்காவில் மயங்கி விழுந்த 4 வயது சிறுவன் ஒருவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளான்.
நேற்று மாலை 4.20 மணியளவில் சுங்கை பூலோ மருத்துவமனை மருத்துவர் ஒருவரிடமிருந்து இது குறித்து தங்களுக்குப் புகார் கிடைத்ததாக சுங்கை பூலோ மாவட்ட போலீஸ் உறுதிப்படுத்தியது.
முதற்கட்ட விசாரணையில், அச்சிறுவன் அங்குள்ள சிறுவர்களுக்கான நீச்சல் குளப் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்தது தெரியவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, அவனது குடும்பத்தினர் உடனடியாக சிறுவனை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோதிலும், செல்லும் வழியிலேயே அவன் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து முழுமையான சவப் பரிசோதனை அறிக்கை வந்த பிறகே மரணத்திற்கான உண்மையான காரணம் தெரியவரும் என்பதால், தற்போதைக்கு இச்சம்பவம் திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மேலும், இச்சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சிகள் யாரேனும் இருந்தால் போலீஸாரிடம் தகவல் வழங்கி உதவ வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.



