
ரந்தாவ், ஜூன்-20 – மாணவர்களிடையே டிஜிட்டல் கற்றல் வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், நெகிரி செம்பிலான், ரந்தாவிலுள்ள லின்சம் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு 5 மடிக்கணினிகள் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன.
சோஷியல் ஐ-தெனாகா அசோசியேஷன் (SiTA) மற்றும் கேஷ்லோட்டஸ் செண்டிரியான் பெர்ஹாட் நிறுவனம் இணைந்து இந்த கல்வி மேம்பாட்டுப் பங்களிப்பை வழங்கியுள்ளன.
தலைமையாசிரியை சன்னாசினி தேவி தலைமையில், மொத்தம் 95 மாணவர்கள் பயிலும் இப்பள்ளியில் ஏற்கனவே கணினி ஆய்வகம் செயல்பட்டு வருகிறது.
எனினும், அங்கு வெறும் 15 மடிக்கணினிகள் மட்டுமே இருந்ததால், மாணவர்களுக்கு ஒரே நேரத்தில் தகவல் தொழில்நுட்ப வகுப்புகளை நடத்துவதில் சிரமம் ஏற்பட்டது.
இதனால் மாணவர்கள் தனித்தனி அமர்வுகளாகப் பங்கேற்க வேண்டிய நிலை இருந்தது.
தற்போது வழங்கப்பட்டுள்ள 5 புதிய மடிக்கணினிகள் மூலம் இந்த பற்றாக்குறை நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது.
இதன் வழி கீழ்நிலை மற்றும் மேல்நிலை மாணவர்கள் ஒரே நேரத்தில் தங்களது டிஜிட்டல் அறிவுத் திறன்களை மேம்படுத்திக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்தச் சிறந்த ஆதரவுக்காக பள்ளி நிர்வாகமும், பெற்றோர்-ஆசிரியர் சங்கமும் தங்களது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளன.



