
கிளாங், ஜூன்-23 – முன்னாள் தோட்டப் பகுதிகளில் அமைந்துள்ள இந்துக் கோயில்களுக்கு மாற்று நிலம் ஒதுக்கி, அவற்றை அரசிதழில் பதிவு செய்வதை கட்டாயமாக்க வேண்டும் என்று செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் ஜார்ஜ் வலியுறுத்தியுள்ளார்.
இவ்விவகாரத்தை தாம் ஏற்கனவே சிலாங்கூர் மாநில சட்டமன்றத்தில் எழுப்பியுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், பல தசாப்தங்களாக இருந்து வரும் தோட்டக் கோயில்கள் வெறும் வழிபாட்டுத் தலங்களல்ல; அவை இந்திய சமூகத்தின் வரலாறு, கலாசாரம் மற்றும் பாரம்பரிய அடையாளங்களின் சின்னங்களாக விளங்குகின்றன என்றார்.
கடந்த காலங்களில் தோட்ட உரிமையாளர்களின் அனுமதியுடனும் ஆதரவுடனும் தொழிலாளர்களின் மதத் தேவைகளைப் பூர்த்தி செய்ய உருவாக்கப்பட்ட இந்தக் கோயில்கள், இன்று நில மேம்பாட்டுத் திட்டங்களால் உரிய தீர்வின்றி பாதிக்கப்படுவது வருத்தமளிப்பதாக அவர் தெரிவித்தார்.
தோட்ட நிலங்களைப் பெற்று அபிவிருத்தி செய்யும் நிறுவனங்களும், முன்னாள் தோட்ட உரிமையாளர்களும் சமூகத்தின் வரலாற்றுப் பங்களிப்பை புறக்கணிக்கக் கூடாது என வலியுறுத்திய குணராஜ், கோயில்கள் இடமாற்றம் செய்யப்பட வேண்டிய சூழல் ஏற்பட்டால் பொருத்தமான மாற்று நிலம் வழங்கப்படுவதோடு, அந்த நிலம் உடனடியாக அரசிதழில் பதிவு செய்யப்பட வேண்டும் என்றார்.
அரசு, உள்ளூராட்சி மன்றங்கள், அபிவிருத்தி நிறுவனங்கள் மற்றும் கோயில் நிர்வாகங்கள் இணைந்து நீடித்த தீர்வை உருவாக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.



