
பெட்டாலிங் ஜெயா, ஜூன்-24-பண்டார் சன்வேயில் வெளிநாட்டு மாணவி ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில், காதல் மற்றும் பணத் தகராறு காரணமாக இருந்திருக்கலாம் என போலீஸின் தொடக்கக் கட்ட விசாரணைத் தெரிவிக்கிறது.
20 வயதிலான பாதிக்கப்பட்ட மாணவியும், இந்த வழக்கின் முக்கிய சந்தேக நபரான மற்றொரு வெளிநாட்டு ஆண் மாணவரும் காதலித்து வந்ததோடு, இருவரும் ஒரே அடுக்குமாடி குடியிருப்பில் ஒன்றாக வசித்து வந்துள்ளனர்.
இவர்களுக்கிடையே அன்றாட பணப் புழக்கம் உள்ளிட்ட தனிப்பட்ட விவகாரங்கள் தொடர்பாக ஏற்பட்ட மோதலே இந்த கொலைக்குக் காரணம் என்று சிலாங்கூர் போலீஸ் தலைமை அதிகாரி டத்தோ Shazeli Kahar தெரிவித்தார்.
மாணவியின் உடல் மீட்கப்பட்ட சில நிமிடங்களிலேயே, அதே குடியிருப்பில் இருந்த அந்த சந்தேக நபரைப் போலீஸார் கைதுச் செய்தனர்.
மேலும், கொலைக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஆயுதம் உட்பட சில முக்கிய ஆதாரங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
இக்கொலையில் வேறு நபர்களுக்குத் தொடர்பிருப்பதாகத் தெரியவில்லை என Shazeli குறிப்பிட்டார்.
மாணவியின் மரணத்திற்கான துல்லியமான காரணத்தைக் கண்டறிய தற்போது சவப்பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.



