
கோலாலாம்பூர், ஜூலை-9 – ஜோகூர் மாநிலத் தேர்தலில், இந்தியச் சமூகத்தினர் தங்களின் வாக்குரிமையை வெற்று வாக்குறுதிகளின் அடிப்படையில் அல்லாமல், பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்தின் உண்மையான சாதனைகளை நோக்கி செலுத்த வேண்டும் என, PKR மத்தியத் தலைமைத்துவ மன்ற உறுப்பினர் Dr குணராஜ் ஜோர்ஜ் அழைப்பு விடுத்துள்ளார்.
பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் மலேசியா மடானி தொலைநோக்குத் திட்டம், இந்தியச் சமுதாயத்திற்கு ‘நம்பிக்கை’ (Nambikei) எனும் புதிய அத்தியாயத்தைத் திறந்துவிட்டுள்ளதாக, சிலாங்கூர் செந்தோசா சட்டமன்ற உறுப்பினருமான அவர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 3 ஆண்டுகளில் மடானி அரசு இந்தியர்களுக்காகச் செய்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க உதவிகளை அவர் பட்டியலிட்டார்.
குறிப்பாக, மித்ரா நிதி ஒதுக்கீடு 150 மில்லியன் ரிங்கிட்டாகவும், தெக்குன் நேஷனல் இந்திய தொழில்முனைவோர் நிதி 100 மில்லியன் ரிங்கிட்டாகவும் உயர்த்தப்பட்டுள்ளது என்றார் அவர்.
அத்துடன், அமானா இக்தியா மலேசியா AIM) மூலம் இந்தியப் பெண் தொழில்முனைவோருக்கு 100 மில்லியன் ரிங்கிட்டும், இவ்வாண்டு தொடக்கத்தில் தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டுக்காக 50 மில்லியன் ரிங்கிட்டும் மடானி அரசால் நேரடியாக வழங்கப்பட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.
பழைய பாணியிலான இனவாத மற்றும் வெற்றுப் பேச்சு அரசியலில் ஜோகூர் இந்தியர்கள் சிக்கிக் கொள்ள வேண்டாம் எனக் கேட்டுக்கொண்ட குணராஜ், மாநிலத்தின் நிலையான பொருளாதார வளர்ச்சிக்கும், எதிர்காலத்திற்கும் பக்காத்தான் ஹராப்பானுக்கே தங்களின் ஆதரவை வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.



