
ஷா ஆலாம், ஜூலை,14- பொதுப் பல்கலைக்கழகமொன்றில் பயிலும் மாணவியைப் பின்தொடர்ந்து வந்த சந்தேகத்தின் பேரில் ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அந்நபர் கடந்த ஏப்ரல் மாதம் முதலே அம்மாணவியைத் தொந்தரவு செய்தும் பின்தொடர்ந்தும் வந்ததாக நம்பப்படுகிறது. 20 வயது மதிக்கத்தக்க அவ்வாடவர், அடுக்குமாடிக் குடியிருப்பொன்றில் காலணிகளை எடுத்து முகர்ந்து பார்க்கும் காட்சி அடங்கிய CCTV பதிவு முன்னதாக சமூக வலைதளங்களில் வைராகியிருந்தது.
நேற்று மாலை 3.55 மணியளவில் பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரைத் தொடர்ந்து அந்நபர் கைது செய்யப்பட்டார். CCTV பதிவில் காணப்பட்ட நபர் தொந்தரவு செய்து தம்மைப் பின் தொடர்ந்ததாகவும் அம்மாணவி கூறியதாக ஷா ஆலாம் மாவட்ட காவல்துறைத் தலைவர் உதவி ஆணையர் Sarudin Samah தெரிவித்தார். சந்தேக நபருக்கு எந்தக் குற்றப் பின்னணியும் இல்லை என்பதும், ஆரம்பக் கட்ட சிறுநீர் பரிசோதனையில் அவர் போதைப்பொருள் பயன்படுத்தவில்லை என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
அச்சம்பவம் விசாரிக்கப்பட்டு வருவதாகவும், அந்நபர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படும். அச்சம்பவம் தொடர்பில் தகவல் இருந்தால் காவல் நிலையத்தைத் தொடர்பு கொண்டு உதவ முன் வருமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.



