Latestமலேசியா

2026 முதல் 2030 ஆம் ஆண்டு வரைக்குமான வியூக திட்டத்தையும் இலக்கமயமாக்கல் வியூக திட்டத்தையும் அறிமுகப்படுத்தியது தேசிய ஒற்றுமைத்துறை அமைச்சு

கோலாலம்பூர், ஜூலை-16-தேசிய ஒற்றுமைத்துறை அமைச்சு 2026 முதல் 2030 ஆம் ஆண்டு வரைக்குமான மூலோபாயத் திட்டத்தையும் இலக்கமயமாக்கல் மூலோபாயத் திட்டத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது.

இவ்விரு முக்கியத் திட்டங்களும் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு அமைச்சின் வழிகாட்டியாக முக்கிய ஆதார ஆவணங்களாக விளங்கும் என அமைச்சர் Datuk Aaron Ago Dagang தெரிவித்துள்ளார்.

அவ்விரு திட்டங்களும் தேசத்தைக் கட்டியெழுப்புவது, சமூக ஒருங்கிணைப்பின் அடித்தளத்தை வலுப்படுத்துவது மற்றும் பாரம்பரியப் பொக்கிஷங்களைப் பாதுகாப்பது ஆகிய இலட்சியங்களின் அடிப்படையில் வகுக்கப்பட்ட 5 மையக் கருக்கள், 12 உத்திகள் மற்றும் 33 முன்முயற்சிகளை உள்ளடக்கியிருக்கிறது.

அத்திட்டங்கள் மடானி மலேசியாவின் இலட்சியங்கள் மற்றும் பதின்மூன்றாவது மலேசியத் திட்டத்தின் கீழ் அமைச்சின் நோக்கத்தின் அடிப்படையில் தொகுக்கப்பட்டுள்ளன.

புதுமையைப் புகுத்தும் வகையில், இத்திட்டங்களின் செயலாக்கத்தைக் கண்காணிக்க முக்கியக் கருவியாகக் கொள்கைத் தாக்க மதிப்பீட்டு (PIP) அளவுகோல் முறை பயன்படுத்தப்படுகிறது.

2026-2030 இலக்கமயமாக்கல் உத்தேசத் திட்டம், டிஜிட்டல் உருமாற்ற செயல்திட்டத்திற்கு ஏற்ப 7 உத்திகள், 21 திட்டங்கள் மற்றும் 55 துணைத் திட்டங்களை உள்ளடக்கியுள்ளது.

இத்திட்டம், ஒருங்கிணைந்த டிஜிட்டல் சேவை வழங்கும் சூழலமைப்பை வலுப்படுத்துவது, அண்மைய மற்றும் பாதுகாப்பான தொழில்நுட்பத்தின் அடிப்படையில் டிஜிட்டல் உள்கட்டமைப்பை வலுப்படுத்துவது, டிஜிட்டல் ஆளுமையை வலுப்படுத்துதல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பத் திறன்களை மேம்படுத்துதல் ஆகிய மூன்று முக்கியக் கூறுகளை அடிப்படையாகக் கொண்டுள்ளதாக Aaron Ago Dagang குறிப்பிட்டார்.

இதனிடையே, அருங்காட்சியகங்களை வலுப்படுத்த, அவற்றின் சூழலமைப்பை முறைப்படுத்தவும் போட்டித்தன்மை வாய்ந்ததாக மாற்றவும் நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியகங்களிலிருந்து தகவல்களைச் சேகரிக்கும் தேசிய கலைப்பொருள் சேகரிப்புகளின் தேசியத் தரவுத் தளத்தை உருவாக்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இன்றுவரை, மலேசிய அருங்காட்சியகத் துறையின் கீழ் உள்ள சேகரிப்புகளின் மொத்த எண்ணிக்கை 437,242-ஐ எட்டியுள்ளதையும் அமைச்சர் சுட்டிக் காட்டினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!