
பேங்கோக், ஜூலை 17 – அரசு பணியாளர் நியமனம் மற்றும் பதவி உயர்வுக்கான தேர்வுகளில் நடைபெற்ற மிகப்பெரிய மோசடி தொடர்பாக, தாய்லாந்தில் 5,814 அரசு ஊழியர்களை இடைநீக்கம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
கடந்த ஜூன் மாதம் தொடங்கிய விசாரணையில், தேர்வில் தேர்ச்சி பெறச் செய்வதற்காக சில அதிகாரிகள் 8 லட்சம் பாட் (Baht) வரை லஞ்சம் பெற்று, விண்ணப்பதாரர்களின் மதிப்பெண்களை மின்னணு முறையில் மாற்றியமைத்தது கண்டறியப்பட்டது.
இந்த மோசடி தொடர்பாக இரண்டு ஆண்கள் மற்றும் ஒரு பெண் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் அண்டை நாடான லாவோஸுக்கு தப்பிச் சென்ற நிலையில் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு அபராதத்துடன் அதிகபட்சம் ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படலாம்.
இந்த மோசடியின் முழு அளவை கண்டறிய உள்துறை அமைச்சு சுமார் 8 லட்சம் தேர்வுத் தாள்களை மீளாய்வு செய்து வருகிறது.
இந்தச் சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்த பிரதமர், ஊழல் மூலம் பதவிகளைப் பெறுவது நாட்டின் நிர்வாக அமைப்பையே பாதிக்கும் மோசமான செயல் என்று கூறினார்.



