
கூலிம், ஜூலை.21- கெடா, கூலிமில் Tarbiah Diniah சமய இடைநிலைப் பள்ளியின் ஆண்கள் தங்கும் விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில், 101 மாணவர்கள் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
இன்று அதிகாலை 2.47 மணிக்கு அவசர அழைப்பு வந்ததைத் தொடர்ந்து, கூலிம், கூலிம் Hi-Tech மற்றும் உள்ளூர் தன்னார்வ தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக மாவட்ட தீயணைப்பு, மீட்புத்துறையின் உதவி ஆணையர் Abdul Mois Ahmad Mansur தெரிவித்தார்.
இரண்டு மாடிகளைக் கொண்ட அக்கட்டிடத்தின் மேல் தளத்தில் தீ பரவி, கட்டிடத்தின் சுமார் 65 விழுக்காட்டுப் பகுதி சேதமுற்றது. தீயணைப்பு வீரர்கள் சென்று சேர்வதற்கு முன்பே, 101 மாணவர்களும் பாதுகாப்பாக வெளியேறி கூடல் இடத்திற்குச் சென்று விட்டதாக அவர் கூறினார்.
தீயணைப்பு வீரர்கள் 3.09 மணிக்குள் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். பின்னர் பாதுகாப்பு தொடர்பான இறுதிச் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
தீயில் சேதமடைந்த விடுதியில் படிவம் 2, 3, 4 மற்றும் 6-ஆம் வகுப்பு மாணவர்கள் தங்கியிருந்தனர். உயிர் தப்பிய மாணவர்கள் அனைவரும் தங்கள் குடும்பத்தினருடன் வீட்டிற்குச் செல்ல பள்ளி நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.
தீ விபத்துக்கான காரணம் மற்றும் அதில் ஏற்பட்ட மொத்த நிதி இழப்பு குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.



