
புது டெல்லி, ஜூலை-22 – இந்தியத் தலைநகர் புது டெல்லியில் பிரதமர் இல்லத்திற்கு வெளியே நேற்று பெரும் அரசியல் பரபரப்பு ஏற்பட்டது.
NEET தேர்வு விவகாரம் மற்றும் மாணவர் போராட்டத்திற்கு ஆதரவாக நடைபெற்ற முற்றுகைப் போராட்டத்தில், நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி உள்ளிட்ட மூத்த எதிர்கட்சித் தலைவர்கள் போலீஸாரால் வலுக்கட்டாயமாக கைதுச் செய்யப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டனர்.
NEET தேர்வு விவகாரத்தில் போலீஸார் நடத்திய தடியடியைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது.
போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தியைப் பாதுகாப்புப் படையினர் தரையில் இருந்து தர தரவென இழுத்துச் செல்லும் காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
அதோடு குண்டுக்கட்டாக ராகுல் தூக்கிச் செல்லப்படுவதையும் காண முடிந்தது.
மேலும், இந்த மோதலின் போது ராகுல் காந்திக்கு மூக்கில் இருந்து இரத்தம் வடிந்ததைப் போன்ற புகைப்படங்களும் காங்கிரஸ் கட்சியால் வெளியிடப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
மறுபுறம், இந்த விவகாரம் குறித்துப் பேசிய மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த அரசு சம்மதித்த பிறகும், கல்வி அமைச்சர் பதவியை விலக வேண்டும் என்ற புதிய கோரிக்கையை ராகுல் காந்தி திடீரென முன்வைத்து பேச்சுவார்த்தையைத் தடுத்து நிறுத்தியதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் எதிர்கட்சித் தலைவர்களின் கைது குறித்து இந்திய நாடாளுமன்றத்தில் கடும் அமளி நிலவி வருகிறது.
புது டெல்லியில் உச்சக்கட்ட அரசியல் பதற்றம் நீடிப்பதால், பிரதமர் நரேந்திர மோடி கடும் சவாலை எதிர்நோக்கியுள்ளார்.



