
பாகான் டாலாம், ஜூலை-26-பினாங்கு பாகான் டாலாமில் அமைந்துள்ள ஸ்ரீ முனீஸ்வரர் ஸ்ரீ உக்கிர காளியம்மன் ஆலயத்தின் நிலப் பயன்பாடு தொடர்பில் நீண்டகாலமாக நிலவி வந்த பிரச்னைக்கு இறுதியாக சாதகமான தீர்வு கிடைத்துள்ளது.
சுமார் 87 ஆண்டுகளாக இயங்கி வரும் இந்த ஆலயத்திற்கு தற்போது நிலப் பயன்பாட்டுக்கான அதிகாரப்பூர்வ அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் குமரன் கிருஷ்ணன் தெரிவித்தார்.
இதன் மூலம், எதிர்கால நிர்வாகம் மற்றும் மேம்பாட்டு திட்டங்களை நடைமுறையிலுள்ள சட்டங்கள் மற்றும் விதிமுறைகளுக்கு ஏற்ப மேற்கொள்ள வழிவகுக்கும் என அவர் கூறினார்.
இந்த விவகாரத்திற்கு நல்ல தீர்வு காணும் பணியில் முழுமையான ஒத்துழைப்பு, ஆதரவு மற்றும் அர்ப்பணிப்பை வழங்கிய Southern Pipe நிறுவனத்திற்கும், இதில் பங்காற்றிய அனைத்து தரப்பினருக்கும் குமரன் தனது நன்றியைத் தெரிவித்தார்.
ஆலய நிர்வாகத்திற்கும் Southern Pipe நிறுவனத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு கையெழுத்திடப்பட்ட நிகழ்வில் அவர் அவ்வாறு சொன்னார்.
இந்த முன்னேற்றம், உள்ளூர் சமூகத்திற்கு பயனளிப்பதுடன், பல்லின மக்களிடையே பரஸ்பர மரியாதை, புரிந்துணர்வு மற்றும் நல்லிணக்கத்தை மேலும் வலுப்படுத்தும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இவ்வேளையில், நீண்ட கால பிரச்னைக்கு தீர்வு கண்ட குமரனுக்கு, ஆலய குருக்கள் பி. குமரவேல் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்துக் கொண்டார்.



