
ஜோகூர் பாரு, ஜூலை-28-ஜோகூர், Forest City-யில் இயங்கி வந்த இரண்டு பிரம்மாண்ட இணைய மோசடிக் கும்பல்களை முறியடித்த போலீஸார், அங்கு ஒரே நேரத்தில் நடத்தப்பட்ட அதிரடி வேட்டையில் 335 பேரைக் கைதுச் செய்துள்ளனர்.
அழைப்பு மையங்களாகச் செயல்பட்டு வந்த 27 சொகுசு அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் 5 பங்களாக்களில் இந்தச் சோதனை நடத்தப்பட்டது.
கைதானவர்களில் 309 பேர் சீன நாட்டவர்கள் ஆவர்.
மேலும், இந்தச் சோதனையின் போது 1,500-க்கும் மேற்பட்ட கைப்பேசிகள் மற்றும் 300 கணினிகளையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.
சீனா மற்றும் இந்தோனேசியாவைச் சேர்ந்தவர்களை இலக்காகக் கொண்டு, கிரிப்டோகரன்சி முதலீடு மற்றும் காதல் வலை மோசடிகளில் இந்த கும்பல்கள் ஈடுபட்டு வந்ததாக ஜோகூர் போலீஸ் கூறியது.
சம்பந்தப்பட்ட 194 பேர் மீது ஜோகூர் பாரு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் சுமத்த உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், தலைமறைவாக உள்ள மோசடிக் கும்பலின் முக்கியப் புள்ளிகளைத் தேடும் பணியில் போலீஸார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.



