
கோலாலம்பூர், ஜூலை.29-Tabung Haji தொடர்பான RCI எனும் அரச விசாரணை ஆணையத்தின் அறிக்கையை ரகசியப் பட்டியலிலிருந்து நீக்கி, அதனைப் பொதுவில் வெளியிடவும், சட்ட மீறல்கள் ஏதேனும் இருந்தால் அது குறித்து அமலாக்க நிறுவனங்கள் முழுமையான விசாரணை நடத்தவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
2014 முதல் 2020 வரையிலான காலகட்டத்தில் யாத்ரீகப் பயண நிதிய வாரியத்தின் நிர்வாகம், குறிப்பாகச் சிறப்பாகச் செயல்படாத சொத்துகளை ஒரு சிறப்புப் பிரிவுக்கு மாற்றியதை விவரிக்கும் RCI அறிக்கை குறித்து, Tabung Hajiயின் உயர்மட்ட நிர்வாகத்தினர் இன்று அமைச்சரவைக்கு விளக்கமளித்ததாக அரசாங்கப் பேச்சாளர் Datuk Seri Fahmi Fadzil தெரிவித்தார்.
அவ்வகையில் அந்த அறிக்கையை ரகசியப் பட்டியலிலிருந்து நீக்கி, பொதுவிக் வெளியிட அமைச்சரவை ஒப்புக் கொண்டது. அது விரைவில் மக்களவையின் சிறப்புக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டு விவாதிக்கப்படும் என அவர் கூறினார்.
அறிக்கையின் அடிப்படையில் அமலாக்க நிறுவனங்கள் உடனடியாக முழுமையான விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்றும், சட்டத்தை மீறியதாகக் கண்டறியப்படும் தரப்பினர் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்றும் அமைச்சரவை ஒப்புக் கொண்டது.
மேம்பாட்டிற்கான 25 பரிந்துரைகளில் Tabung Haji, 75 விழுக்காட்டை நிறைவேற்றி விட்டது. 2025 நிதியாண்டிற்கான 3.5 சதவீத லாபப் பகிர்வு குறித்த அறிவிப்பையும் அமைச்சரவை கவனத்தில் கொண்டதாக Fahmi குறிப்பிட்டார்.
நிர்வாகம் மற்றும் நிதியின் நிதி நிலைமை குறித்த கவலைகள் எழுந்ததைத் தொடர்ந்து, 2014 முதல் 2020 வரையிலான காலகட்டத்தில் Tabung Hajiயின் நிர்வாகம், செயல்பாடுகள் மற்றும் சொத்து தொடர்பான சிக்கல்களை விசாரிக்க 2021-றில் RCI அமைக்கப்பட்டது. விசாரணைக் குழு தனது அறிக்கையை 2022 ஜூலை மாதம் நிறைவு செய்தது.
வைப்புத் தொகை வைத்திருப்பவர்களிடையே பீதியைத் தவிர்க்கவே அந்த அறிக்கையை வெளியிடுவது தாமதப்படுத்தப்பட்டதாகப் பிரதமர் Datuk Seri Anwar Ibrahim கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.



