
உலு சிலாங்கூர், ஆக 1 – நேற்று உலு சிலாங்கூர் வட்டாரத்தின் கெர்லிங் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த 30 வயது பெண் ஆசிரியர் சுதா மூர்த்தி என்பவர் ஆசிரியர் அறையிலே தூக்கிட்டு உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவத்தின் உண்மையான காரணம் என்ன என்பது குறித்து பல தரப்பினரும் கேள்வி எழுப்பியுள்ள நிலையில், விசாரணை இன்னும் முழுமையடைவில்லை.
இதனிடையே, கல்வி அமைச்சு முழுமையான மற்றும் வெளிப்படையான விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
குறிப்பாக, ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் அதிகப்படியான பணிச்சுமை, நிர்வாக அழுத்தம், மனஅழுத்தம் உள்ளிட்ட வேலைச் சூழல் பிரச்சினைகள் இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையதா என்பதையும் ஆழமாக ஆராய வேண்டும் என கல்வியாளர்கள், சமூக அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
இது தனிப்பட்ட சம்பவமாக மட்டும் கருதப்படக் கூடாது என்றும், நாடு முழுவதும் ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் வேலைச் சவால்களை மதிப்பீடு செய்யும் வாய்ப்பாக கல்வி அமைச்சு இதை பயன்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
பணிச்சுமை அல்லது பணியிட அழுத்தம் காரணமாக இருப்பது உறுதி செய்யப்பட்டால், தேவையான சீர்திருத்த நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் உண்மையை வெளிக்கொண்டு வந்து, இனி இதுபோன்ற துயரச் சம்பவங்கள் மீண்டும் நிகழாத வகையில் தேவையான நடவடிக்கைகளை கல்வி அமைச்சு எடுக்க வேண்டும் என்பதே பல தரப்பினரின் ஒருமித்த வலியுறுத்தலாக உள்ளது.



