
அலோர் காஜா, ஆகஸ்ட்-8-பிரிட்டனில் உள்ள ஹோட்டல் ஒன்றை 330 மில்லியன் ரிங்கிட் நட்டத்திற்கு விற்கும் உத்தேசத் திட்டம் தொடர்பாக, ஃபெல்டா (Felda) நிர்வாகத்திடம் இருந்து பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் முழுமையான அறிக்கை கோரியுள்ளார்.
மலாக்காவில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பேசிய அன்வார், சுமார் 880 மில்லியன் ரிங்கிட்டுக்கு வாங்கப்பட்ட அந்த ஹோட்டலை, வெறும் 550 மில்லியன் ரிங்கிட்டுக்கு விற்க முன்மொழியப்பட்ட ஆவணத்தில் தாம் கையெழுத்திட மறுத்துவிட்டதாகத் தெரிவித்தார்.
ஃபெல்டா குடியேற்றக்காரர்களும் அவர்களின் குடும்பங்களும் பொருளாதார ரீதியாகப் போராடி வரும் நிலையில், இவ்வளவு பெரிய நட்டத்தை ஏற்பதை ஏற்க முடியாது என்று பிரதமர் கவலை வெளியிட்டார்.
இந்த முடிவை எடுத்தவர்கள் யார் என்பதைக் கண்டறிய விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள அன்வார், ஃபெல்டா நிறுவனத்தின் நற்பெயரையும் நிதிப் பாதுகாப்பையும் உறுதிச் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.



