
ஜோகூர் பாரு, ஆகஸ்ட்-16-ஜோகூர் பாரு, இஸ்கண்டார் புத்ரியில் சொகுசு கார்களின் ஊர்வலத்துக்கு வழிவிடுவதற்காக பொதுப் போக்குவரத்தைத் தடுத்து நிறுத்தி, அனுமதியின்றி ‘marshals’-களாக செயல்பட்ட இரு காரோட்டிகளைப் போலீஸார் கைதுச் செய்துள்ளனர்.
புத்ரி துறைமுகத்திலிருந்து ஜோகூர் பாரு மாநகர் நோக்கிச் சென்ற அந்த சொகுசு கார் அணிவகுப்புக்காக, புலாத்தான் லெபோ கோத்தா இஸ்கண்டார் பகுதியில் மற்ற வாகனங்களை அவ்விரு ஆடவர்களும் நிறுத்திய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
சந்தேக நபர்கள் மீது 1987-ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் 1,000 ரிங்கிட் வரை அபராதம் விதிக்கப்படலாம்.
மேலும், விதிமுறைகளை மீறியதற்காக 4 சம்மன்கள் வெளியிடப்பட்டு, சம்பந்தப்பட்ட வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
அனுமதியின்றி போக்குவரத்தைத் தடுக்கும் இதுபோன்ற சட்டவிரோதச் செயல்கள் பொது மக்களின் பாதுகாப்புக்கு ஆபத்தை விளைவிப்பதாகப் போலீஸார் எச்சரித்துள்ளனர்.



