Latestமலேசியா

தமிழ்ப்பள்ளி மாணவர்களின் ஆங்கிலத் திறனை உலக அரங்குக்கு கொண்டு செல்லும் Basis Bay; HIPPO இறுதிச் சுற்றுக்கும் ஆதரவு

2023-ஆம் ஆண்டு முதல் தமிழ்ப்பள்ளி மாணவர்களின் ஆங்கிலப் பேச்சுத் திறனை வளர்க்கும் நோக்கில் Basis Bay நிறுவனம் நடத்தி வரும் ‘சரஸ்வதி ஆங்கில சவால் பேச்சுப் போட்டி’, தற்போது அடுத்த கட்டப் பரிணாமத்தை எட்டியுள்ளது.

மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உறுதுணையாகப் பல்வேறு புதிய முயற்சிகளை அந்நிறுவனம் முன்னெடுத்துள்ளது.

​கடந்தாண்டில் வெறும் போட்டியாக மட்டுமல்லாமல், மாணவர்களுக்கு இலவச இயங்கலை வகுப்புகளையும் Basis Bay வழங்கியது.இதன் மூலம் மாணவர்களிடையே குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணப்பட்டது.

​இதன் தொடர்ச்சியாக, இவ்வாண்டு 4-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு உதவும் வகையில், மெட்ரிக்ஸ் தேர்வை (Matrix Exam) எதிர்கொள்ளப் பிரத்யேகப் பயிற்சி வீடியோக்களைக் கொண்ட ‘Saraswathy English Challenge’ யூ டியூப் தளமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

​அதே சமயம், இத்தாலியில் நடைபெறவுள்ள புகழ்பெற்ற HIPPO உலகளாவிய ஆங்கிலப் போட்டியின் இறுதிச் சுற்றுக்குத் தேர்வாகியுள்ள பண்டார் மக்கோத்தா செராஸ் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த 4 மாணவர்களுக்கு, Basis Bay நிறுவனம் ரொக்க ஊக்கத்தொகை வழங்கி சிறப்பித்துள்ளது.

​மாணவர்கள் ஆங்கிலத்தில் சரளமாகப் பேசும் ஆற்றலைப் பெற்றால் உலக அரங்கில் சிறந்து விளங்க முடியும் என்றும், திறமைகளை வெளிக்கொணர மொழி மிக முக்கியம் என்றும் Basis Bay நிறுவனத்தின் தலைவர் டத்தோ பிரபா தியாகராஜா தெரிவித்தார்.

இவ்வேளையில், சந்தைப்படுத்தல் மற்றும் தகவல் தொடர்புப் பிரிவுத் தலைவர் அமண்டா ஹேண்ட்ரியானி (Amanda Handriani) இத்திட்டத்தின் முக்கியத்துவம் குறித்தும் விளக்கினார்.மேலும் Basis Bay நிறுவனத்தின் CSR நிபுணரான சிவனேஸ்வரன் ராமலிங்கம், சமூக நலன் மற்றும் மாணவர் திறன் மேம்பாடு குறித்து வணக்கம் மலேசியாவிடம் பேசினார்.

இதனிடையே, அடுத்த ஆண்டுக்கான சரஸ்வதி ஆங்கில சவால் பேச்சுப் போட்டி விரைவில் தொடங்கவுள்ளதாகத் தெரிவித்ததோடு, போட்டி குறித்த முக்கிய விவரங்களை Basis Bay-யின் தரம் மற்றும் நிலைத்தன்மைப் பிரிவுத் தலைவர் செல்வமலர் செல்வராஜு செய்தியாளர் சந்திப்பில் விளக்கமளித்தார்.

நிகழ்வில் பங்கெடுத்த மாணவர்களின் பெற்றோர்களும் பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர்களும் தங்களின் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர்.மாணவர்களின் உலகளாவிய கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்தும் இத்தகைய முயற்சிகள், தமிழ்ப்பள்ளி மாணவர்களிடையே புதிய உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!