
ஷா ஆலாம், ஆகஸ்ட் 17 — பல இன, மத மக்களிடையே புரிந்துணர்வையும் நல்லிணக்கத்தையும் வலுப்படுத்தும் நோக்கில், PAS மத்திய உலாமா மன்றம் முதல் முறையாக மதங்களுக்கு இடையிலான வட்டமேசை கலந்துரையாடலை நடத்தியது.
PAS மற்றும் பெரிக்காத்தான் நேஷனல்-லின் பல இன, மத சமூகங்களுடனான அணுகுமுறையை வலுப்படுத்தும் மற்றும் விரிவுபடுத்தும் முயற்சியாகவும் இந்த நிகழ்ச்சி அமைந்தது.
நேற்று ஷா ஆலாமில் நடைபெற்ற Peace & Harmony எனும் தேநீர் நிகழ்ச்சியில் இஸ்லாம், இந்து, சீக்கியம், கிறிஸ்தவம் மற்றும் பௌத்தம் உள்ளிட்ட பல்வேறு மதங்களைச் சேர்ந்த சுமார் 200 பேர் கலந்துகொண்டனர்.
“மலேசியா நம் அனைவரின் பொதுவான வீடு. மதம், இனம், கலாசாரம் மற்றும் பின்னணியில் நாம் வேறுபட்டாலும், ஒரே தாய்நாட்டையும் ஒரே எதிர்காலத்தையும் பகிர்ந்து கொள்கிறோம்,” என PN தலைவரும் திரெங்கானு மந்திரி பெசாருமான டத்தோ ஸ்ரீ டாக்டர் அஹ்மட் சம்சூரி மொக்தார் நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்துப் பேசினார்.
பன்முகத்தன்மை நாட்டின் பலவீனம் அல்ல; விவேகத்துடன் நிர்வகிக்கப்பட்டால் அதுவே மலேசியாவின் பலமாக அமையும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
ஒருவரையொருவர் அறிந்து கொள்வதன் மூலம் மத நம்பிக்கைகள், கலாசாரம் மற்றும் உணர்வுகளைப் புரிந்துகொள்ள முடியும். அதன் வழி தவறான புரிதல்களையும் முன்முடிவுகளையும் குறைத்து நம்பிக்கையை வளர்க்க முடியும் என்றார் சம்சூரி.
“மதங்கள் வேறாக இருக்கலாம்; பகைமை வேண்டாம். இனங்கள் வேறாக இருக்கலாம்; முன்முடிவு வேண்டாம். கருத்துகள் வேறாக இருக்கலாம்; பரஸ்பர மரியாதையை இழக்க வேண்டாம்,” என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
இதற்கிடையில், பங்கேற்பாளர்கள் மதம், இன உறவுகள் மற்றும் சமூக விவகாரங்கள் தொடர்பான கேள்விகளை PAS தலைவர்களிடம் நேரடியாக முன்வைக்கவும், வெளிப்படையாக கருத்துகளைப் பரிமாறிக் கொள்ளவும் வாய்ப்பு வழங்கப்பட்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
PAS மத்திய உலாமா மன்றம் முன்னெடுத்துள்ள முதலாவது இத்தகைய மதங்களுக்கு இடையிலான உரையாடல் என்பதால், பல இன சமூகங்களுடன் நேரடியாகப் பேசவும் அவர்களின் கருத்துகளைக் கேட்கவும் PAS முன்னெடுக்கும் புதிய அணுகுமுறையின் தொடக்கமாகவும் இது பார்க்கப்படுகிறது.
இதில் முன்னாள் அமைச்சரும் PAS மத்திய செயற்குழு உறுப்பினருமான தான் ஶ்ரீ அனுவார் மூசாவும் கலந்து கொண்டு பேசினார்.



