
புத்ராஜெயா, ஆகஸ்ட் 19 – நாட்டின் 69-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, தொழிலாளர்களின் பாதுகாப்பு, திறன் மேம்பாடு, வேலைவாய்ப்பு மற்றும் சமூக நலனை மேலும் வலுப்படுத்த மனிதவள அமைச்சு (கெசுமா) பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
மெனாரா பெர்கேசோவில் நடைபெற்ற கெசுமா மாதாந்திர கூட்டம் மற்றும் சுதந்திர தின மாதக் கொண்டாட்டத்தில் உரையாற்றிய அவர், MYFutureJobs தளம் வேலைதேடுபவர்களையும் நிறுவனங்களையும் இணைக்கும் முக்கிய தளமாகச் செயல்படுவதாகக் கூறினார்.
ஜனவரி 1 முதல் ஆகஸ்ட் 14 வரை நாடு முழுவதும் 4,393 வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, 2,02,951 காலிப் பணியிடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அவற்றின் மூலம் 1,17,733 பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
அதேவேளையில், RM710 மில்லியனுக்கும் அதிக மதிப்பிலான PACE பொருளாதார மீள்திறன் திட்டத்தின் மூலம் சுமார் 86,000 தொழிலாளர்கள் சமூகப் பாதுகாப்பு, திறன் பயிற்சி, வேலைவாய்ப்பு மற்றும் கிக் தொழிலாளர் மேம்பாட்டில் பயனடைவார்கள்.
2026-ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் JTKSM 10,716 தொழிலாளர் வழக்குகளைக் கையாண்டு 71 சதவீதத் தீர்வை எட்டியதுடன், 4,859 பொதுப் புகார்களில் 92 சதவீதத்திற்குத் தீர்வு கண்டுள்ளது.
வெளிநாட்டு ஊழியர் மேலாண்மையை மேம்படுத்த OSC நிர்வாகப் பொறுப்பையும் கெசுமா ஏற்றுள்ளது.
மேலும், சிங்கப்பூருக்கு தினமும் சென்று பணியாற்றும் சுமார் 450,000 மலேசியர்களுக்கான ‘பெர்கேசோ பயணிகள் திட்டம்’ தயார் நிலையில் உள்ளதுடன், அது வரவிருக்கும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படவுள்ளது.
TVET மாணவர்களின் நிதிச்சுமையைக் குறைக்கும் வகையில், PTPK-வின் RM100 மில்லியன் கடனுதவித் திட்டத்தை முழு மானியமாக மாற்றும் முன்மொழிவும் அமைச்சரவையின் பரிசீலனைக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளது.
கெசுமாவின் வெற்றி மக்களின் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களின் அடிப்படையிலேயே அளவிடப்பட வேண்டும் என்றும், அரசு, முதலாளிகள் மற்றும் தொழிலாளர்கள் இடையிலான உறவை வலுப்படுத்தி நிலையான வேலைவாய்ப்பு சூழலை உருவாக்க அமைச்சு தொடர்ந்து செயல்படும் என்றும் ரமணன் தெரிவித்தார்.



