
பெட்டாலிங் ஜெயா, ஆகஸ்ட் 20 : நாடு முழுவதிலும் உள்ள தமிழ்ப்பள்ளி மாணவர்களின் மலாய் மொழி ஆற்றல், தன்னம்பிக்கை மற்றும் பொதுப் பேச்சுத் திறனை மேம்படுத்தும் நோக்கில் நடைபெற்ற 2026 தேசிய அளவிலான ‘Ikon Bicara Bahasa Melayu’ போட்டி, மாணவர்களிடையே குறிப்பிடத்தக்க வரவேற்பைப் பெற்றது.
முதலாம் ஆண்டு முதல் மூன்றாம் ஆண்டு வரையிலான மாணவர்களுக்கு கதை சொல்லும் போட்டியும், நான்காம் ஆண்டு முதல் ஆறாம் ஆண்டு வரையிலான மாணவர்களுக்கு பொதுப் பேச்சுப் போட்டியும் நடத்தப்பட்டன. சிறுவயதிலிருந்தே மலாய் மொழியைத் தன்னம்பிக்கையுடனும் திறம்படவும் பயன்படுத்துவதுடன், தொடர்பாடல் மற்றும் பொதுப் பேச்சுத் திறன்களை வளர்ப்பதும் போட்டியின் முக்கிய நோக்கமாக அமைந்தது.
இப்போட்டிக்கு நாடு முழுவதிலிருந்தும் 7,000க்கும் மேற்பட்ட பதிவுகள் கிடைத்தன. இரு பிரிவுகளிலும் தலா 40 மாணவர்கள் அரையிறுதிக்குத் தேர்வு செய்யப்பட்ட நிலையில், இறுதியாக தலா 14 பேர் என மொத்தம் 28 மாணவர்கள் தேசிய இறுதிச் சுற்றில் போட்டியிட்டனர்.

முதல் நிலை கதை சொல்லும் பிரிவில் மலாக்கா, SJKT Alor Gajah பள்ளியைச் சேர்ந்த Shivanniei Puspa Nathan முதலிடம் பெற்றார். இரண்டாம் நிலை பொதுப் பேச்சுப் பிரிவில் SJKT Sg Renggam பள்ளியைச் சேர்ந்த Hazael Amaris Francis Xavier முதலிடம் பிடித்தார்.
தமிழ்ப்பள்ளி மாணவர்கள் தேசிய மொழியில் தங்களது சிந்தனைகளைத் தெளிவாகவும் தன்னம்பிக்கையுடனும் வெளிப்படுத்துவதற்கான திறனை வளர்த்துக் கொள்வதன் முக்கியத்துவத்தை இப்போட்டி எடுத்துக்காட்டியுள்ளது.
இப்போட்டியை MindAppz ஏற்பாடு செய்திருந்த நிலையில், நிகழ்வில் தேவான் பஹாசா டான் புஸ்தகா (DBP) மொழித் திட்டமிடல் அதிகாரி ஷரிசுல் ரஸ்லி பின் சேத் மற்றும் மலேசிய தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர்கள் சங்கத் தலைவர் பழனி சுப்பையா உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.




