
கங்கார், ஆகஸ்ட்-24-பெர்லிஸ், புக்கிட் லாகியில் உள்ள இந்து ஆலயம் ஒன்று இடிக்கப்பட்ட விவகாரத்தைத் தொடர்ந்து, வரும் ஆகஸ்ட் 30-ஆம் தேதி ‘சிவப்புப் பேரணி’ நடத்த முயற்சி மேற்கொள்ளப்படுவது தொடர்பாக போலீஸ் விசாரணையைத் தொடங்கியுள்ளது.
சமூக ஆர்வலர் அருண் துரைசாமி, ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் RSN ராயர் உள்ளிட்டோருடன் தொடர்புப்படுத்தப்படும் இந்த பேரணி பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் அமையக்கூடும் எனக் கூறி, கங்கார் அம்னோ இளைஞர் பிரிவு போலீஸில் புகாரளித்துள்ளது.
இதனடிப்படையில், இதன் ஏற்பாட்டாளர்கள் விரைவில் விசாரணைக்கு அழைக்கப்படுவர் என பெர்லிஸ் இடைக்கால போலீஸ் தலைவர் Zaihairul Idrus தெரிவித்தார்.
எந்தவொரு கோரிக்கையாக இருந்தாலும் சட்ட வழிகளைப் பின்பற்றி முன்வைக்கப்பட வேண்டும் என்றும், இனம், மதம், ஆட்சியாளர்கள் தொடர்பான 3R உணர்வுகளைத் தூண்டி நாட்டின் அமைதியைக் குலைக்க வேண்டாம் என்றும் அவர் பொது மக்களை எச்சரித்தார்.



