Latestமலேசியா

வைரல் வீடியோ விவகாரத்தில் திடீர் திருப்பம்: “அந்தப் பெண் நான்தான்” – அவதூறு பரப்பியவர்கள் மீது மலேசியப் பெண் சட்ட நடவடிக்கை

கோலாலம்பூர், ஆகஸ்ட்-25-முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக அரசின் அமைச்சர் கீர்த்தனா எனத் தவறாக சித்தரிக்கப்பட்டு பரப்பப்பட்ட வைரல் வீடியோ விவகாரத்தில் ஒரு புதிய திருப்பமாக, அதிலிருப்பது தாம் தான் என மலேசியப் பெண் ஒருவர் விளக்கம் அளித்துள்ளார்.

அதோடு சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.

​குட்டைப் பாவாடை அணிந்து காரிலிருந்து இறங்கும் பெண்ணின் வீடியோவை வைத்து, அது தமிழகத் தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா என எதிர்க்கட்சியினர் அவதூறு பரப்பியதாக முன்னதாக சர்ச்சை எழுந்தது.

இதற்கு அமைச்சர் கீர்த்தனா மற்றும் பல்வேறு அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

அது தாமல்ல என விளக்கியிருந்த கீர்த்தனா, ஒருவேளை அது தானாகவே இருந்தாலும், அணியும் ஆடையை மற்றவர்கள் விமர்ச்சிக்க உரிமையில்லை என்றும் கூறியிருந்தார்.

​இந்நிலையில், அந்த வீடியோவில் இருப்பது தாம்தான் எனத் தெரிவித்துள்ள மலேசியப் பெண் ஒருவர், தனது அனுமதியின்றி வீடியோவைப் பரப்பியவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என, புதிய வீடியோவில் தெரிவித்துள்ளார்.

வீடியோவின் கீழ் பதிவிடப்பட்ட ஆபாசமான மற்றும் தரக்குறைவான கருத்துகளுக்குத் தனது கடும் கண்டனத்தைப் பதிவுச் செய்துள்ள அவர், தமக்கு ஆதரவாகக் குரல் கொடுத்து நின்ற பொது மக்களுக்கு நன்றியைத் தெரிவித்துள்ளார்.

​இந்த அதிரடித் திருப்பம், அரசியல் ஆதாயத்திற்காகப் பெண்களின் தனிப்பட்ட வாழ்க்கையை இழிவுபடுத்தும் இணைய அத்துமீறல்களுக்கு எதிரான விவாதங்களைத் தீவிரப்படுத்தியுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!