
7 நாட்களில் 12 மலைகளை ஏறி தனது சொந்த சாதனையை முறியடிக்கும் முயற்சியில் களமிறங்கியுள்ள மலையேற்ற வீரர் லோகசந்திரன் ராமசந்திரனின் பயணம் இன்று இரண்டாவது நாளாகத் தொடர்கிறது.
நாட்டின் 69ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நேற்று ஜோகூரின் Gunung Ledang மலையில் தனது பயணத்தைத் தொடங்கிய லோகசந்திரன், தற்போது நெகிரி செம்பிலானில் தனது அடுத்தடுத்த இலக்குகளை நோக்கி முன்னேறி வருகிறார்.
இன்று நள்ளிரவு 12.54 மணியளவில் Gunung Datuk மற்றும் Gunung Rembau மலைகளை ஏறத் தொடங்கிய அவர், காலை 7 மணியளவில் இரு மலைகளையும் வெற்றிகரமாக நிறைவு செய்தார்.
இந்த மலையேற்றத்தில் Hemaraj, Tharunn மற்றும் Arif ஆகியோரும் லோகசந்திரனுடன் இணைந்து பயணித்து வருகின்றனர்.
செங்குத்தான பாதைகள் மற்றும் பாறைகள் நிறைந்த பகுதிகள் என மலையேற்றம் சவாலாக அமைந்தபோதிலும், குழுவினர் இரு மலைகளையும் பாதுகாப்பாகக் கடந்து இலக்கை அடைந்தனர்.இதற்கிடையில், காலில் ஏற்பட்ட காயத்தையும் பொருட்படுத்தாமல் லோகசந்திரன் தனது சாதனை முயற்சியைத் தொடர்ந்து வருகிறார்.
ஒருவழியாக Gunung Berembun மலையேற்றத்தைத் தொடர்ந்த லோகசந்திரன், இன்று மதியம் 3.40 மணியளவில் அதன் உச்சியை வெற்றிகரமாக அடைந்தார். இதனைத் தொடர்ந்து, அவரது அடுத்த இலக்கு Gunung Angsi ஆகும்.
ஒவ்வொரு நாளும் புதிய மலை, புதிய சவால் எனத் தொடரும் லோகசந்திரனின் சாதனைப் பயணம் அடுத்து எந்தக் கட்டத்தை எட்டவுள்ளது?
லோகசந்திரனின் சாதனைப் பயணத்தின் அடுத்தகட்ட தகவல்களுக்கு தொடர்ந்து வணக்கம் மலேசியாவைப் பின்தொடருங்கள்.



