
கோலாலம்பூர், ஆகஸ்ட்-29,நாட்டின் 69-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு “தன்னம்பிக்கையே மூலதனம்” என்ற இலட்சியத்துடன் 7 நாட்களில் 12 மலைகளை ஏறும் மீண்டுமொரு சாதனைக் பயணத்தில் இறங்கியுள்ளார் பேராக்கைச் சேர்ந்த இளைஞர் லோகசந்திரன்.
அதன் ஒரு பகுதியாக, அவரும் அவரது குழுவினரும் நேற்று காலை சிலாங்கூரில் உள்ள Gunung Hitam மலையை ஏறினர்; பின்னர் மாலையில் நெகிரி செம்பிலானில் உள்ள Gunung Angsi மலையை ஏற வேண்டியிருந்த நிலையில், காயம் காரணமாக லோகசந்திரனும், அவரின் நண்பர்களான தருண், சாந்தகுமார் இருவரும் பஹாங்கில் உள்ள Gunung Jasar மலையில் ஏறினர்.
இந்த மாற்றத்திற்கான முறையான அனுமதியும் மலேசிய சாதனைப் புத்தகத்திடம் பெறப்பட்டது.
Gunung Jasar மலையேற்றம் மாலை 6.36 மணிக்குத் தொடங்கி, இரவு 7.56 மணிக்கு அதன் உச்சியை அவர்கள் அடைந்தனர்.
மலையடிவாரத்தில் இறங்கிய உடனேயே, அங்கிருந்து 6 மணி நேர கார் பயணம் மூலம் அவர்கள் திராங்கானுவை நோக்கிச் சென்றனர்.
இந்நிலையில் இன்று காலை 8.08 மணிக்கு திரங்கானு செத்தியூவில் உள்ள Gunung Sarut மலையேறத் தொடங்கிய அவர்கள், சற்று முன்னர் அதனை வெற்றிகரமாக நிறைவுச் செய்தனர்.
தசைப்பிடிப்பு, உடல் சோர்வு மற்றும் கடுமையான காயங்களைத் தாண்டித் தொடரும் இவர்களது இந்தச் சவால், நாளை காலை கெடாவில் உள்ள Gunung Bintang மலையில் தொடரும்.
இதன் ஆகக் கடைசி தகவல்களை வணக்கம் மலேசியா நாளை மீண்டும் உங்களுக்குக் கொண்டு வரும்.



