Latestமலேசியா

இந்தியாவில் 3 கிலோவுக்கும் அதிகமான ஹைட்ரோபோனிக் கஞ்சா கடத்தல் – மலேசியர் கைது

கோலாலம்பூர், செப்.03- இந்தியா, சென்னையில் 3.45 கிலோ எடையுடைய ஹைட்ரோபோனிக் கஞ்சாவை கடத்த முயன்றதாக 62 வயதான மலேசிய ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிட்டதட்ட 520,000 ரிங்கிட் பெறுமானமுள்ளதாகக் கூறப்படும் அப்போதைப்பொருளை கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதி இந்தியாவுக்குள் கடத்த முயற்சிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

கோலாலம்பூரில் இருந்து சென்னையில் உள்ள அண்ணா சர்வதேச விமான நிலையம் சென்றடைந்த அந்நபர், சுங்கத்துறையிடம் எந்தப் பொருளையும் அறிவிக்காமல் ‘Green Channel’ வழியாக வெளியேற முயன்றுள்ளார்.

பயணிகளின் நடமாட்டத்தைக் கண்காணித்த சென்னை சுங்கத்துறையின் விமான நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகளுக்கு அவர் மீது சந்தேகம் ஏற்பட்டது.

அதைத் தொடர்ந்து அவரது பயணப் பெட்டியைச் சோதனையிட்டதில் அடிப்பகுதியில் ரகசியமான மறைவிடத்தில் நான்கு காற்றுப்புகாத பைகள் கண்டுபிடிக்கப்பட்டன.

அவற்றில் பச்சை கலந்த பழுப்பு நிறத்தில் உலர்ந்த பொருளாக 3,452 கிராம் ஹைட்றோபோனிக் கஞ்சா இருந்தது கண்டறியப்பட்டது.

அதனை அடுத்து இந்தியாவின் 1985ஆம் ஆண்டு போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டு, சந்தேக நபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார்.

சர்வதேச போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புடன் அவருக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

சென்னையில் ஹைட்ரோபோனிக் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட இரண்டாவது நபர் அவராவார்.

இதற்கு முன் கடந்த ஆகஸ்ட் 8 ஆம் தேதி, பேராக் மாநிலத்தைச் சேர்ந்த 54 வயது மலேசியர் ஒருவர் பாங்காக்கிலிருந்து சென்னைக்குச் சென்ற போது 4.03 கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டார்.

அப்போதைப்பொருள் தாய்லாந்தில் இருந்து பெறப்பட்டிருக்கலாம் என Bukit Aman கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!