
கோலாலாம்பூர், செப்டம்பர்-5,தேசிய ஒருமைப்பாட்டுத் துறை அமைச்சு, Arkib Malaysia எனப்படும் மலேசிய ஆவணக் காப்பகம் வாயிலாக “துன் அப்துல் ரசாக் நினைவேந்தல் திட்டம்: தேசத்தை உருவாக்கிய சிற்பி” எனும் சிறப்பு நிகழ்வை வரும் செப்டம்பர் 8-ஆம் தேதி கோலாலம்பூரில் உள்ள துன் அப்துல் ரசாக் நினைவகத்தில் நடத்துகிறது.
தேசிய மற்றும் மலேசிய தினத்தை முன்னிட்டு நடைபெறும் இந்நிகழ்வை பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைப்பார்.
நிகழ்ச்சியில், நாட்டின் இரண்டாவது பிரதமரான துன் ரசாக்கின் புதல்வர் டத்தோஸ்ரீ முகமட் நிஜாமின் வரலாற்றுப் பகிர்வுடன், முன்னாள் துணைப் பிரதமர் துன் மூசா ஹீத்தாம், முன்னாள் நிதியமைச்சர் தெங்கு ரசாலி ஹம்சா மற்றும் தான் ஸ்ரீ நாசிர் துன் அப்துல் ரசாக் ஆகிய முக்கியத் தலைவர்கள் பங்கேற்கும் ‘Bicara Negarawan’ சிறப்பு கலந்துரையாடலும் இடம்பெறும்.
முன்னாள் தலைவர்களின் அர்ப்பணிப்பும் கொள்கைகளும் நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்க இளையத் தலைமுறைக்கு வழிகாட்டியாக இருக்கும் என தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் டத்தோ ஏரன் அகோ டகாங் தெரிவித்தார்.
காலை 9 மணி முதல் தொடங்கும் இந்நிகழ்வில் பொது மக்கள் அனைவரும் திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்



