
ஷா ஆலாம், செப்டம்பர்-6,ஆன்மீக சடங்குகள், வழிபாடுகள் மற்றும் மந்திர உச்சரிப்புகள் அடங்கிய யோகா பயிற்சிகளில் முஸ்லீம்கள் ஈடுபடுவது இஸ்லாமிய ஹாரியா சட்டப்படி தடைச் செய்யப்பட்டுள்ளதாக, கூட்டரசு பிரதேச முஃப்தி Ahmad Fauwaz Fadzil தெரிவித்துள்ளார்.
இஸ்லாமியர்கள் உட்பட அனைத்து மதத்தவர்களும் யோகா செய்யலாம் என்றும், அதுவும் இந்தியா ரிஷிகேஷி சென்று சிவ யோகா பீத் மையத்தில் கூட அதனை மேற்கொள்ளலாம் என்றும் சமூக ஊடகங்களில் வெளியான வீடியோ ஒன்றுக்கு விளக்கமளித்து பேசுகையில் அவர் அவ்வாறு சொன்னார்.
உடற்பயிற்சி, உடல் நெகிழ்வுத்தன்மை மற்றும் மூச்சுப் பயிற்சி ஆகியவற்றைத் தாண்டி, பிற மதங்களின் வழிபாட்டு முறைகள், தியானங்கள் அல்லது மந்திரங்கள் கலந்த யோகா பயிற்சிகள் இஸ்லாமிய நம்பிக்கைக்கு எதிரானவை என்றார் அவர்.
இது, 2009-ஆம் ஆண்டு அமுல்படுத்தப்பட்ட கூட்டரசு பிரதேச ஃபத்வா (Fatwa) ஆணையில் தெளிவாகச் சுட்டிக் காட்டப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.
வழிபாட்டு அம்சங்கள் அல்லாத வெறும் உடற்பயிற்சிகளை மட்டுமே முஸ்லீம்கள் மேற்கொள்ள வேண்டும் என்றும், பிற மதச் சடங்குகளைப் பின்பற்றுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.



