Latestமலேசியா

ஊரக மேம்பாட்டு அமைச்சின் செலவினம் குறித்த கருவூலக் கூற்றை மறுத்த சாஹிட்

கோலாலம்பூர், செப்-7-புறநகர் மற்றும் வட்டார மேம்பாட்டு அமைச்சு, அதற்கு அங்கீகரிக்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டை மீறி செலவு செய்வதாகக் கூறப்படுவதை அதன் அமைச்சர் Datuk Seri Dr Ahmad Zahid Hamidi மறுத்திருக்கிறார்.

வரவு-செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்ட தொகையை விடக் கூடுதலாக எந்த அமைச்சும் செலவு செய்யாது. அதேவேளை, குறிப்பிட்ட செலவுக்கு தனியாக ஒதுக்கீடு இல்லாத போது பணம் செலுத்த வேண்டிய கட்டாயச் சூழ்நிலை ஏற்பட்டால், அந்தச் செலவை அமைச்சே ஏற்க வேண்டியிருக்கும் என அவர் விளக்கினார். அமைச்சின் செயல்திறனை திட்டங்களின் எண்ணிக்கை, பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை அல்லது செலவிடப்பட்ட தொகை ஆகியவற்றை மட்டும் அடிப்படையாகக் கொண்டு மதிப்பிடக் கூடாது என்றும் துணைப்பிரதமருமான Zahid கூறினார்.

புறநகர் திட்டங்களைக் கட்டுமான நிறுவனங்கள் நிறைவு செய்திருந்த போதிலும், அவற்றுக்குப் பணம் செலுத்துவதில் தாமதம் ஏற்படுவதாகவும், அதனால் சில நிறுவனங்கள் பணப் புழக்கச் சிக்கல்களை எதிர்கொள்வதாகவும் அல்லது மூடப்படும் நிலைக்கு தள்ளப்படுவதாகவும் Zahid முன்னதாகச் சுட்டிக் காட்டியிருந்தார்.

அதற்கு பதிலளித்த கருவூலப் பொதுச் செயலாளர் Johan Mahmood Merican, கிராமப்புற சாலைத் திட்டங்களுக்கான இவ்வாண்டு ஒதுக்கீட்டில் பெரும்பகுதி ஏற்கனவே பயன்படுத்தப்பட்டுவிட்டதாகக் கூறினார். அதன் காரணமாக பணம் செலுத்துவதில் கட்டுப்பாடுகள் ஏற்பட்டுள்ளது. மேலும், அமைச்சுக்கு ஒதுக்கீடு முழுமையாக வழங்கப்பட்டுள்ள போதிலும், அண்மைய சில ஆண்டுகளாக கிராமப்புற சாலைத் திட்டங்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட வருடாந்திர ஒதுக்கீட்டை விட அதிகமாகச் செலவு செய்யப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!