Latestமலேசியா

புத்ராஜெயாவில் மோட்டார் சைக்கிள்களைக் கைவிட்டு விட்டு தப்பியோடிய ‘மாட் ரெம்பிட்’ கும்பல்

புத்ராஜெயா, செப்-07-புத்ராஜெயா, Lebuh Sentosa பகுதியில் காவல்துறையின் ஒருங்கிணைந்த அமலாக்க நடவடிக்கையைப் பற்றி அறிந்த ‘மாட் ரெம்பிட்’ என சந்தேகிக்கப்படும் கும்பலைச் சேர்ந்தவர்கள் தங்களது மோட்டார் சைக்கிள்களை மேம்பாலத்தின் கீழ் கைவிட்டு விட்டு தப்பியோடிய தகவல் தெரிய வந்துள்ளது.

அமலாக்க நடவடிக்கை கடந்த சனிக்கிழமை இரவு தொடங்கியது. புத்ராஜெயா மாவட்ட காவல் தலைமையகத்தின் சாலை அடாவடிகளுக்கு எதிரான ‘Operasi Bersepadu Samseng Jalanan’ எனும் அந்நடவடிக்கையில் போக்குவரத்து விசாரணை மற்றும் அமலாக்கப் பிரிவு, நடமாடும் ரோந்து வாகனப் பிரிவு, மோட்டார் சைக்கிள் ரோந்துப் பிரிவு, பிரசின்க்ட் 7 காவல் நிலையப் பிரிவு ஆகியவை ஈடுபட்டன.

சாலை மூடப்பட்டிருந்ததைத் தெரிந்து கொண்ட சில ஓட்டுநர்கள் Lebuh Wawasan மேம்பாலத்தின் கீழ் ஐந்து மோட்டார் சைக்கிள்களை கைவிட்டு விட்டு தப்பிச் சென்றனர். அவ்வாகனங்கள் மேலதிக நடவடிக்கைக்காக காவல் நிலையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டதாக புத்ராஜெயா மாவட்ட காவல் துறைத் தலைவர் உதவி ஆணையர் Aidi Sham Mohamed தெரிவித்தார்.

அந்நடவடிக்கையில், 1987-ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் பிரிவு 64(1)-ன் கீழ் 13 மோட்டார் சைக்கிள்கள், ஒரு கார் என மொத்தம் 14 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பல்வேறு விதிமீறல்களுக்காக 35 சம்மன்களும் வழங்கப்பட்டன. சட்டவிரோதப் பந்தயம், தெருவோர வன்முறை, மோட்டார் சைக்கிள் குழுக்களின் செயல்பாடுகள் தொடர்பான கண்காணிப்பு மற்றும் ரோந்துப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டன.

அதோடு, இரைச்சல் தொல்லை மற்றும் ‘மாட் ரெம்பிட்’ நடவடிக்கைகளை கட்டுப்படுத்த பொதுமக்களின் புகார்கள் கருத்தில் கொள்ளப்பட்டன. சட்டவிரோதப் பந்தயங்களின் ஆபத்துகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்வும் நடத்தப்பட்டது. இளைஞர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கூட்டுத் தொழுகையும் இடம் பெற்றதாக Aidi Sham கூறினார். காவல்துறை, பொதுப் பாதுகாப்பு மற்றும் ஒழுங்கைப் பாதிக்கும் செயல்களுக்கு எதிரான அமலாக்கம் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும். அதே வேளை, சந்தேகத்துக்கிடமான நடவடிக்கைகள் குறித்து பொதுமக்கள் தொடர்ந்து தகவல் அளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!