
கிள்ளான், செப்-07- இன்று அதிகாலை போர்ட் கிள்ளானில் உள்ள Kampung Telok Gong பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு வீடுகள் முற்றிலுமாக அழிந்தன. ஹோண்டா சிவிக் காரொன்று மோசமாகச் சேதமடைந்தது.
அத்தீச் சம்பவம் குறித்து அதிகாலை 3.01 மணிக்குத் தங்களுக்குத் தகவல் கிடைத்ததாக சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செயல்பாட்டுப் பிரிவு உதவி இயக்குநர் Ashrul Riezal Asbar தெரிவித்தார்.
அதனை அடுத்து போர்ட் கிள்ளான் மற்றும் ஸ்ரீ அண்டலாஸ் தீயணைப்பு, மீட்பு நிலையங்களைச் சேர்ந்த 14 தீயணைப்பு வீரர்கள் உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டனர். சம்பவ இடத்தில் அவர்கள் இரண்டு இணைந்த வீடுகளும் ஹோண்டா சிவிக் காரொன்றும் தீப்பிடித்து எரிந்ததைக் கண்டனர். தீயணைப்பில் இரு தீயணைப்பு, மீட்பு வாகனங்கள், ஒரு தண்ணீர் லாரி, அவசர மருத்துவ மீட்பு சேவை வாகனம் ஆகியவை ஈடுபடுத்தப்பட்டன.
அவற்றின் உதவியுடன் தீ முழுமையாக அணைக்கப்பட்டது. அச்சம்பவத்தில் உயிரிழப்புகள் ஏதுமில்லை என Ashrul Riezal கூறினார்.



