
கோலாலாம்பூர், செப்டம்பர்-19-முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் ரசாக்கிற்காகத் தொடங்கப்பட்ட ‘நஜிப் ரசாக் ஒருமைப்பாட்டு நிதி’, இன்று காலை 9.30 மணி நிலவரப்படி 1 மில்லியன் ரிங்கிட்டை எட்டியுள்ளது.
இத்தகவலை அம்னோ பொதுச் செயலாளர் டத்தோ Dr அஷ்ராப் வஜ்டி டுசுக்கி தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.
நஜீப்புக்கு விதிக்கப்பட்டுள்ள 50 மில்லியன் ரிங்கிட் அபராதத் தொகையைச் செலுத்த உதவுவதற்காக இந்த நிதி திரட்டும் முயற்சி அம்னோவால் தொடங்கப்பட்டது.
நஜீப் 50 மில்லியன் ரிங்கிட் அபராதத்தைச் செலுத்தும் பட்சத்தில், 2028 ஆகஸ்ட் 23 வரையிலான அவரின் எஞ்சிய சிறைத் தண்டனைக் காலத்தை வீட்டுக் காவலில் கழிக்க மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் நேற்று நிபந்தனையுடன் கூடிய பொதுமன்னிப்பு வழங்கினார்.
இந்நிலையில், பொது மக்களிடையே தொடங்கப்பட்ட இந்த நிதி திரட்டும் முயற்சி சமூக ஊடகங்களில் பல்வேறு தரப்பினரின் கவனத்தையும் கருத்துக்களையும் பெற்று வருகிறது.



