
சுங்கை சிப்புட், செப்-22-பேராக், Pos Perwor, Kampung Takung அருகே காட்டுப் பகுதியில் பிரம்பு சேகரிக்கச் சென்ற 42 வயது ஓராங் அஸ்லி ஆடவர் புலி தாக்கி உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. Zamberi Angah எனும் அந்த ஆடவர், Korbu பாதுகாக்கப்படும் வனப் பகுதியில் மற்றொருவருடன் பிரம்பு தேடச் சென்றிருந்த போது அவரை புலி தாக்கியதாக நம்பப்படுகிறது.
அவரது சடலம் தாக்குதல் நடந்ததாகக் கருதப்படும் இடத்திலிருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் கண்டெடுக்கப்பட்டது. மாலை 4.30 மணியளவில் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, வனவிலங்கு அதிகாரிகளும் சுங்கை சிப்புட் வனவிலங்கு அலுவலக ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
காவல்துறையினர், மலேசிய பொது தற்காப்புப் படை, RELA உறுப்பினர்கள், கிராமவாசிகள், மரம் வெட்டும் தொழிலாளர்கள் ஆகியோர் தேடுதல் நடவடிக்கையில் பங்கேற்றனர். மாலை 6.58 மணியளவில் Zamberiயின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
சடலத்தில் கடித்ததற்கான தடயங்களும், அருகில் புலியின் கால்தடங்களும் போராட்டத்திற்கான தடயங்களும் காணப்பட்டதாக Lintang தொகுதி சட்டமன்ற உறுப்பினர் Datuk Mohd Zolkafly Harun தமது முகநூல் பதிவில் குறிப்பிட்டார்.
அச்சம்பவம் மிகவும் துயரமானது என்றும், அது பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் மற்றும் உள்ளூர் சமூகத்தினர் மத்தியில் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் அவர் கூறினார். Zamberiயின் குடும்பத்தினருக்கு நிவாரண உதவியைப் பெறும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றாரவர்.
புலியைப் பிடிக்க பொறி அமைக்கப்படும். சம்பந்தப்பட்ட பகுதியில் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனக் குறிப்பிட்ட Mohd Zolkafly, காட்டுப் பகுதிக்குள் செல்வதைத் தவிர்த்து, அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் பொதுமக்களுக்கு ஆலோசனை கூறினார்.



