
பத்து பஹாட், செப்- 22-ஜோகூரில் தனது 18 வயது மைத்துனரைக் கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட 17 வயது இளைஞருக்கு மனநலப் பரிசோதனை நடத்த Yong Peng மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அவர் நீதிமன்ற விசாரணையை எதிர்கொள்ளவும், தம் மீதான குற்றச்சாட்டுக்கு விளக்கமளிக்கவும் தகுதியுள்ளவராக இருக்கிறாரா இல்லையா என்பதைத் தீர்மானிக்கும் வகையில், அக்டோபர் 22ஆம் தேதி Permai மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.
கடந்த செப்டம்பர் 17ஆம் தேதி அதிகாலை சுமார் 5 மணியளவில் Senggarang பகுதியில் உள்ள ஒரு வீட்டில் அச்சம்பவம் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. குற்றஞ்சாட்டப்பட்ட இளைஞர் கத்திக் குத்துக்கு இலக்கான நபருடனும் சாட்சிகளுடனும் ஒரே வீட்டில் வசித்து வருவதைக் கருத்தில் கொண்டு நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்க மறுத்தது.
இவ்வேளையில் காயத்திற்காகச் சிகிச்சை பெற்று கடந்த சனிக்கிழமை வீடு திரும்பிய அவரது மைத்துனரும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தார்.



