Latestமலேசியா

நெகிரி செம்பிலான் மாநிலச் செயலாளர், சட்ட ஆலோசகர் இடைநீக்கம்

சிரம்பான், செப்டம்பர் 22 – சிரம்பானில், நெகிரி செம்பிலான் மாநிலச் செயலாளர் டத்தோ முகமட் ஸாஃபிர் இப்ராஹிம் (Datuk Mohd Zafir Ibrahim) மற்றும் மாநில சட்ட ஆலோசகர் டத்தோ முஸல்மா முஸ்தபா கமால் (Datuk Muzalmah Mustapha Kamal) ஆகியோர் உடனடியாகப் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இன்று நடைபெற்ற மாநில ஆட்சிக்குழுவின் சிறப்புக் கூட்டத்தில் இந்த முடிவு ஒருமனதாக எடுக்கப்பட்டதாக மந்திரி பெசார் டத்தோ இஸ்மாயில் லாசிம் (Datuk Ismail Lasim) தெரிவித்தார்.

இதையடுத்து, புதிய மாநிலச் செயலாளர் நியமிக்கப்படும் வரை மாநில நிதி அதிகாரி டத்தோ மாஸ்ரி ரசாலி (Datuk Masri Razali) அந்தப் பொறுப்பை கவனிப்பார். புதிய மாநில சட்ட ஆலோசகர் நியமிக்கப்படும் வரை வழக்கறிஞர் ஃபஹ்மி அடிலா (Fahmi Adilah) சட்ட ஆலோசனைப் பணிகளை மேற்கொள்வார். மாநிலச் செயலாளரின் இடைநீக்க அறிவிப்பு தலைமைச் செயலாளருக்கும் பொதுச் சேவைத் துறைக்கும், சட்ட ஆலோசகரின் அறிவிப்பு சட்டத்துறைத் தலைமை அலுவலகத்துக்கும் அனுப்பப்படும்.

அனைத்து மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்களின் பதவிகளும் தொடர்ந்து செல்லுபடியாகும் என்றும், நெகிரி செம்பிலான் மாநில நிர்வாகம் வழக்கம்போல் செயல்படும் என்றும் இஸ்மாயில் கூறினார். இந்த நடவடிக்கை, மாநிலத்தில் ஏப்ரல் முதல் நீடித்து வரும் அரசியலமைப்பு நெருக்கடியின் தொடர்ச்சியாக இடம்பெற்றுள்ளது.

இதற்கிடையில், கடந்த செப்டம்பர் 21ஆம் தேதி துவாங்கு முஹ்ரிஸ் (Tuanku Muhriz), மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்களின் நியமனத்தை உடனடியாக ரத்து செய்திருந்தார். அவர்கள் பதவியேற்பு உறுதிமொழியை மீறியதாக அரண்மனை தரப்பு தெரிவித்தது.

ஆனால், மந்திரி பெசார் அளித்த ஆலோசனை அல்லது கோரிக்கையின்றி ஆட்சிக்குழு உறுப்பினர்களை பதவி நீக்கம் செய்தது சட்டரீதியாகவும் அரசியலமைப்புச் சட்டத்திற்கும் முரணானது என்றும், அதற்கு சட்டபூர்வ அமலில்லை என்றும் இஸ்மாயில் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!