
புத்ராஜெயா, செப்டம்பர்-30,அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்தவும், அதீத இலாபம் ஈட்டுவதைத் தடுக்கவும் அமுலாக்க நிறுவனங்கள் தங்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பை வலுப்படுத்த வேண்டும் என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உத்தரவிட்டுள்ளார்.
புத்ராஜெயாவில் நடைபெற்ற நடப்பாண்டுக்கான தேசிய வாழ்க்கைச் செலவின நடவடிக்கை மன்றத்தின் (NACCOL) இரண்டாவது கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய பிறகு, அவர் இதனைத் தெரிவித்தார்.
உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சான KPDN முன்னெடுத்து வரும் அமுலாக்க நடவடிக்கைகளின் முன்னேற்றத்தை நேற்றையக் கூட்டம் ஆய்வு செய்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், வரும் 2027-ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் கீழ் மக்களின் வாழ்க்கைச் செலவின சுமையைக் குறைப்பதற்கான உடனடி நடவடிக்கைகள் குறித்தும் இந்தக் கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டது.
உலகளாவிய புவிசார் அரசியல் சூழல்கள் உள்நாட்டுப் பொருட்களின் விலை மற்றும் விநியோகத்தைப் பாதிக்காத வகையில், பணவீக்க அழுத்தத்தை அரசு தொடர்ந்து தீவிரமாகக் கண்காணிக்கும் என்றும் அன்வார் உறுதியளித்தார்.



