Latestமலேசியா

இறந்த யானை, காணாமல் போன தந்தங்கள்: ஆய்வக முடிவுகளுக்காகக் காத்திருக்கும் சபா

கோத்தா கினபாலு, அக்-05–Kinabatangan வனவிலங்கு சரணாலயத்தின் லாட் 4 மற்றும் Angco Jaya தோட்டத்திற்கு அருகிலுள்ள ஆற்றில் ஆண் யானையொன்று இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது தொடர்பில் சபா வனவிலங்குத் துறை மேல் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

சுமார் ஆறு அடி உயரம் கொண்ட அந்த யானை, 14 முதல் 18 வயதுக்குட்பட்டதாக இருக்கலாம் என நம்பப்படுகிறது. அந்த யானை, இறந்து நான்கு முதல் ஐந்து நாட்கள் ஆகியிருக்கலாம் என சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் Datuk Jafry Ariffin தெரிவித்தார். யானையின் உடலில் பல காயங்கள் காணப்பட்டதுடன், இரண்டு தந்தங்கள் காணாமல் போயிருந்ததாகவும் அவர் கூறினார்.

அக்டோபர் 1ஆம் தேதி மேற்கொள்ளப்பட்ட உடற்கூறு ஆய்வின்போது, ஆய்வகப் பரிசோதனைக்காக யானையின் உறுப்புகள் மற்றும் வயிற்றிலிருந்த பொருட்கள் சேகரிக்கப்பட்டன. எனினும், காயங்கள், காணாமல் போன தந்தங்கள் மற்றும் யானை இறந்ததற்கான காரணம் ஆகியவை தொடர்பில் இதுவரை எதுவும் உறுதி செய்யப்படவில்லை.

அனைத்து அம்சங்களையும் முழுமையாக விசாரிக்க சபா வனவிலங்குத் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதோடு, சம்பவம் குறித்து முதலில் தகவல் அளித்தவரிடமும் வாக்குமூலம் பெறப்பட்டு வருகிறது. மனிதர்களின் தலையீடு அல்லது வனவிலங்குச் சட்ட மீறல்கள் உறுதி செய்யப்பட்டால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.

இதனிடையே, சம்பவம் தொடர்பாக தகவல் தெரிந்தவர்கள் உடனடியாக வனவிலங்குத் துறைக்கு தெரிவிக்குமாறு Jafry கேட்டுக் கொண்டார். அதே சமயம் விசாரணை நிறைவடையும் வரை, யானையின் இறப்புக்கான காரணம் குறித்து எந்தவிதமான யூகங்களையும் வெளியிட வேண்டாம் என்றும் அவர் நினைவுறுத்தினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!