
கோலாலம்பூர், அக்-05-பெட்டாலிங் ஜெயா நாடாளுமன்ற உறுப்பினர் Lee Chean Chung பதவி விலகியதை அடுத்து அந்த நாடாளுமன்றத் தொகுதி காலியாகியிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 2ஆம் தேதி Lee தமது பதவி விலகல் கடிதத்தை மக்களவை சபாநாயகர் Tan Sri Johari Abdulலிடம் சமர்ப்பித்து விட்டார். கூட்டரசு அரசியலமைப்பின் 54(1) பிரிவின்படி, மக்களவை சபாநாயகர் அக்காலியிடம் குறித்து தேர்தல் ஆணையத்திடம் தெரியப்படுத்தி விட்டதாக மக்களவை துணை சபாநாயகர் Datuk Ramli Md Nor தெரிவித்தார்.
கட்சியில் இருந்து மூன்று ஆண்டுகள் இடைநீக்கம் செய்யப்பட்டதை அடுத்து, பெட்டாலிங் ஜெயா நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக Lee கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்திருந்தார். அதே சமயம் பிகேஆர் உறுப்பினராக இருக்க விரும்பவில்லை என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். பொதுமக்களைப் பாதிக்கும் பல்வேறு விவகாரங்கள் குறித்து வெளிப்படையாகக் கருத்து தெரிவித்ததே இடைநீக்கத்துக்குக் காரணம் எனவும் Lee சுட்டிக் காட்டியிருந்தார்.
‘Bersama’ நிகழ்வில் பங்கேற்ற நிலையில், தமது தொகுதிக்கு ஒதுக்கப்பட்ட நிதியைப் பயன்படுத்தும் அனுமதியை இழந்ததாக Lee கூறியதை அடுத்து, அவருக்கும் பிகேஆருக்கும் இடையிலான கருத்து வேறுபாடு ஜூன் மாதம் தொடக்கத்தில் தீவிரமடைந்தது. கட்சியின் மத்தியத் தலைமை மன்றத்திலிருந்து விலகுவதாகவும் அவர் ஜூன் 12ஆம் தேதி அறிவித்திருந்தார்.



