
குவா மூசாங், அக்.07 -கிளந்தானில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் காணாமல் போயிருந்த 60 வயது ஆடவர், Jalan Ladang Pos Pulat பகுதியில் சுமார் 100 மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தில் விழுந்ததிருந்த Toyota Hilux வாகனத்துக்குள் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.
நில அளவையாளரான Saipul Anwar Daudட்டை அவரது குடும்பத்தினரால் இரண்டு நாட்களாகத் தொடர்பு கொள்ள முடியவில்லை. அதனை அடுத்து சக ஊழியர் ஒருவர் கடைசியாகப் பகிரப்பட்ட live location காட்டிய இடத்திற்குச் சென்று தேடியபோது, அந்த Toyota Hilux வாகனத்தைக் கண்டறிந்தார். பின்னர் பொதுமக்கள் காவல் துறைக்குத் தகவல் தெரிவித்தனர்.
Saipulலின் மனைவி அளித்த தகவலின் அடிப்படையில், அக்டோபர் 4-ஆம் தேதி சம்பவம் நடந்த இடத்திற்கு அருகிலேயே பாதிக்கப்பட்டவரின் கடைசி ‘live location’ கண்டறியப்பட்டதாக குவா மூசாங் மாவட்டக் காவல் துறைத் தலைவர் கண்காணிப்பாளர் Sik Choon Foo தெரிவித்தார்.
மலையிலிருந்து கீழே வந்து கொண்டிருந்தபோது வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையை விட்டு விலகி சுமார் 100 மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தில் விழுந்திருக்கலாம் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. விபத்தை நேரில் பார்த்தவர்கள் யாரும் இல்லாததால், வாகனத்தை இரு நாட்களாகக் கண்டுபிடிக்க முடியவில்லை.
விபத்தில் காயமடைந்த Saipul Anwar சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டதாகக் கூறப்படுகிறது. விபத்துக்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்படுகிறது.



