Latestஉலகம்

முகநூல் பதிவு காரணமாக மரண தண்டனை விதிக்கப்பட்ட நபரை விடுவிக்குமாறு சவூதி அரேபியாவிடம் கோரிக்கை

கொழும்பு, அக்.07-சவூதி அரேபியாவில் முகநூல் பதிவொன்றில் இஸ்லாம் மற்றும் நபிகள் நாயகம் குறித்து அவதூறான கருத்தை வெளியிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட 24 வயது இலங்கைப் புலம்பெயர் ஊழியர் அனோஜன் சிவராசாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை மறுபரிசீலனை செய்யுமாறு அவரது குடும்பத்தினரும் பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அனோஜனுக்கு முதலில் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 3 மில்லியன் சவூதி ரியால் அபராதமும் விதிக்கப்பட்டிருந்தது. எனினும் அரசுத் தரப்பு மேல்முறையீட்டைத் தொடர்ந்து செப்டம்பர் 17ஆம் தேதி அவரது தண்டனை மரண தண்டனையாக உயர்த்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அவரது குடும்பத்தினர் இலங்கை அரசிடம் கருணை நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

அனோஜனுக்கு தேவையான உதவிகளை வழங்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இலங்கை வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது. செப்டம்பர் 21ஆம் தேதி அவரது குடும்பத்தினர் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவை சந்தித்த நிலையில், சவூதி அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துமாறு தூதரக அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்.

இவ்வழக்கு தொடர்பாக பல்வேறு மதத் தலைவர்களும் அரசின் உடனடி தலையீட்டைக் கோரி ஜனாதிபதி செயலகத்தில் மனு அளித்துள்ளனர். இதனிடையே, செப்டம்பர் 28ஆம் தேதிக்குப் பிறகு அனோஜனின் நிலை குறித்து குடும்பத்தினருக்கு எந்தத் தகவலும் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அனோஜனுக்காக சவூதி அரேபியாவில் வாதாடும் உள்ளூர் வழக்கறிஞர்களைச் சந்தித்து வழக்கின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க நான்கு பேர் கொண்ட இலங்கை சட்டக் குழு இவ்வாரம் சவூதிஅரேபியா செல்லவுள்ளது. இரு சட்ட நிறுவனங்கள் இவ்வழக்கைக் கையாளும் நிலையில், அவர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளதாக சட்டக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!