
புதுடெல்லி, அக்டோபர்-8 – இந்தியத் தலைநகர் புது டெல்லியில் 4 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்ததில், கர்ப்பிணிப் பெண் மற்றும் இரு சிறார்கள் உட்பட மூவர் உயிரிழந்தனர்.
மேலும் 8 பேர் காயமடைந்தனர்.
வடகிழக்கு டெல்லியின் Seemapuri பகுதியில், நேற்று பிற்பகல் சுமார் மூன்றரை மணியளவில் இச்சம்பவம் நிகழ்ந்தது.
கட்டடம் இடிந்து விழுந்ததைத் தொடர்ந்து, அதன் இடிபாடுகளுக்குள் பலர் சிக்கிக் கொண்டதாகத் தகவல் வெளியானது.
இதையடுத்து, தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டனர்.
இடிபாடுகளிலிருந்து மீட்கப்பட்ட எண்மர், உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
உயிரிழந்தவர்களில் 4 மாதக் கர்ப்பிணியான 21 வயது இளம் பெண்ணும் அடங்குவார்.
முதல் நாள் இரவு ஏற்பட்ட நிலநடுக்க அதிர்வுகளைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட கட்டடத்தில் விரிசல்கள் ஏற்பட்டதாக உள்ளூர்வாசிகள் கூறியுள்ளனர்.
இருப்பினும், கட்டடம் இடிந்து விழுந்ததற்கான உண்மையான காரணம் விசாரணைக்குப் பின்னரே தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த மாதம் டெல்லியின் Satya Niketan பகுதியில் 5 மாடி விடுதிக் கட்டடம் இடிந்து விழுந்ததில் எழுவர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.



