
மலாக்கா, அக்டோபர்-10,
மலாக்காவில், உடலில் ஏற்பட்ட காயங்களால் ஒரு வயது ஆண் குழந்தை உயிரிழந்த சம்பவம் தொடர்பில், குழந்தையின் தாய் உட்பட மியன்மார் நாட்டினர் நால்வர் கைதுச் செய்யப்பட்டுள்ளனர்.
20 முதல் 50 வயதுக்குட்பட்ட இரு ஆண்களும் இரு பெண்களும் வியாழன் பிற்பகல் 1.30 மணி முதல் மாலை 6 மணிக்குள், பண்டார் ஹிலிரில் உள்ள ஜாலான் மெலாத்தி மற்றும் பூலாவ் மலாக்கா ஆகிய இடங்களில் தனித்தனியாகக் கைதுச் செய்யப்பட்டதாக, மலாக்கா போலீஸ் தலைவர் டத்தோ Dzulkhairi Mukhtar தெரிவித்தார்.
கடந்த புதன்கிழமை மாலை 4 மணியளவில், மியன்மாரைச் சேர்ந்த ஒரு வயது ஆண் குழந்தை உயிரிழந்தது குறித்து மலாக்கா மருத்துவமனை மருத்துவரிடமிருந்து போலீஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளது.
ஆரம்பத்தில், தனது மகன் வலிப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாகக் குழந்தையின் தாய் கூறியிருந்தார்.
எனினும், சவப் பரிசோதனையில் குழந்தையின் மரணத்திற்கு உடல் ரீதியான காயங்களே காரணம் என்பது உறுதிப்படுத்தப்பட்டதாக போலீஸ் தெரிவித்துள்ளது.
குழந்தை சரியான கவனிப்பின்றி புறக்கணிக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையிலும் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.
கைதான நால்வரும் நேற்று முதல் 6 நாட்களுக்குத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
2001-ஆம் ஆண்டு சிறார் சட்டத்தின் கீழ் இச்சம்பவம் விசாரிக்கப்பட்டு வருகிறது.



