
கோலாலம்பூர், அக்டோபர் 20- பெரிக்காத்தான் நேஷனல் கட்சியின் பதிவை ரத்து செய்த மலேசியச் சங்கங்களின் பதிவுத்துறை (ROS) முடிவை, பெர்சத்து வரவேற்றுள்ளது.
பாஸ் தலைமையிலான பெரிக்காத்தான் நேஷனல் நிர்வாகம், சங்கங்கள் சட்டம் மற்றும் கூட்டணியின் அரசியலமைப்பை மீறியதாக ROS-ன் முடிவு நிரூபிப்பதாக பெர்சத்து பொதுச் செயலாளர் டத்தோஸ்ரீ முகமது அஸ்மின் அலி தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூலை 16ஆம் தேதி நடைபெற்ற உச்சமன்றக் கூட்டத்தில் பங்கேற்கவும், கருத்து தெரிவிக்கவும், வாக்களிக்கவும் பெர்சத்துக்கு உரிமை மறுக்கப்பட்டதாக அவர் குற்றஞ்சாட்டினார். இது கூட்டணியின் அரசியலமைப்பை மீறிய கடுமையான செயல் என்றும் அவர் கூறினார்.
இந்த விவகாரம் தொடர்பாக, ஆகஸ்ட் 18ஆம் தேதி ROS-க்கு விளக்கமும் ஆதாரங்களும் அளித்ததாக பெர்சத்து தெரிவித்துள்ளது. கூட்டணி சட்டப்படி மற்றும் வெளிப்படையாகச் செயல்படுவதை உறுதிசெய்யவே புகார் அளிக்கப்பட்டதாகவும் அஸ்மின் அலி கூறினார்.
ROS-ன் முழுமையான முடிவை ஆய்வு செய்த பிறகு, அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து பெர்சத்து உச்சமன்றம் விவாதிக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.



