
தாவாவ், அக்-23-சபாவில் வாட்ஸ்அப் மூலம் பாலியல் சேவைகளை வழங்கிய 19 வயது பெண்ணுக்கு, மீண்டும் அதே குற்றத்தில் ஈடுபட்டதற்காக ஆறு மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. Nurul Syahfathin Puteri Sofea எனும் அவ்விளம் பெண் குற்றவியல் சட்டத்தின் 372பி பிரிவின் கீழ் தம் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை ஒப்புக் கொண்டார்.
அக்டோபர் 20ஆம் தேதி இரவு 9.30 மணியளவில், Bandar Sabindoவில் உள்ள வாடகை அறையிலிருந்து வாட்ஸ்அப் வழியாக அவர் பாலியல் சேவைகளை வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டது. மாறுவேடமிட்டிருந்த காவல் வீரர் ஒருவரிடம் 150 ரிங்கிட் கட்டணம் எனத் தெரிவித்ததைத் தொடர்ந்து, காவல்துறையினர் அந்த அறையில் சோதனை நடத்தினர். அப்போது, இரண்டு ஆணுறைகள், 150 ரிங்கிட் ரொக்கம், சாவி ஆகியவை கைப்பற்றப்பட்டன.
வேலை இழந்ததால் அறை வாடகையைச் செலுத்த முடியாமல் நெருக்கடிக்கு ஆளானதாகவும், தமக்கு சேர வேண்டிய ஊதியம் கிடைக்கவில்லை என்றும் அப்பெண் நீதிமன்றத்தில் விசாரணையின்போது தெரிவித்தார். இதற்கு முன் கோழி இறக்கைகள் விற்கும் கடையில் உதவியாளராக வேலை செய்து வந்ததாகவும் அப்பெண் கூறினார்.
எனினும், அதே குற்றத்திற்காக கடந்த ஆண்டு செப்டம்பர் 4ஆம் தேதி அப்பெண் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், அப்போது அவருக்கு ஆறு மாதங்களுக்கு நாளொன்றுக்கு நான்கு மணி நேரம் சமூகப் பணி செய்யும் உத்தரவு வழங்கப்பட்டிருந்ததாக அரசுத் தரப்பு வழக்கறிஞர் குறிப்பிட்டார்.
இதற்கு முன்பும் வாய்ப்பு வழங்கப்பட்டதை சுட்டிக் காட்டிய நீதிபதி, மீண்டும் அதே குற்றத்தில் ஈடுபட்டதற்காக அப்பெண்ணைக் கண்டித்தார். இறுதியில் அப்பெண்ணுக்கு, ஆறு மாதச் சிறைத்தண்டனை விதித்த நீதிமன்றம், தண்டனைக் காலம் கைது செய்யப்பட்ட நாளிலிருந்து கணக்கிடப்படும் என அறிவித்தது.



