Latestமலேசியா

66 ஆண்டுகாலக் காத்திருப்புக்குத் தீர்வு; கம்போங் உஜோங் பத்து மறுமேம்பாட்டுத் திட்டம் அடுத்த கட்டத்தை எட்டியது

பினாங்கு, பாகான் டாலாம் தொகுதிக்குட்பட்ட கம்போங் உஜோங் பத்து குடியிருப்பாளர்களின் நீண்டகால வீடமைப்புப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் முயற்சியில் முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. 66 ஆண்டுகாலக் காத்திருப்புக்குப் பின், அப்பகுதியின் மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கான ஒப்பந்தம் அக்டோபர் 25ஆம் தேதி கையெழுத்தானது.

பினாங்கு மாநில வீடமைப்பு வாரியத்திற்கும் (LPNPP) Paramount Property (Butterworth) Sdn. Bhd. நிறுவனத்திற்கும் இடையே கையெழுத்தான இந்த ஒப்பந்தத்தின் மூலம், 2013ஆம் ஆண்டு மாவட்ட மற்றும் நில அலுவலகம் நடத்திய கணக்கெடுப்பின்படி தகுதி பெற்ற 268 வீட்டு உரிமையாளர்கள் பயனடைய உள்ளனர்.

தமது பாகான் டாலாம் தொகுதியில் உள்ள இக்குடியிருப்பாளர்களின் நீண்டகால வீடமைப்புப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது, தமது தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்று எனச் சட்டமன்ற உறுப்பினர் குமரன் கிருஷ்ணன் தெரிவித்தார்.

அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் முயற்சியாக, மாநில வீடமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ ஸ்ரீ சுந்தராஜூவுடன் இணைந்து மேம்பாட்டாளருடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியதாக அவர் கூறினார். தற்போது மேம்பாட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதன் மூலம், நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட இத்திட்டம் அடுத்த கட்டத்தை எட்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

குடியிருப்பாளர்களின் உரிமைகளையும் நலன்களையும் பாதுகாத்து, அவர்களுக்குப் பாதுகாப்பான, வசதியான வீடுகள் கிடைப்பதை உறுதி செய்வதே இம்முயற்சியின் நோக்கம் எனக் குமரன் தெரிவித்தார்.

திட்டத்தின் முதல் கட்டக் கட்டுமானப் பணிகள் நிறைவடையும் வரை, சம்பந்தப்பட்ட வீட்டு உரிமையாளர்களுக்கு மாதந்தோறும் 700 ரிங்கிட் தற்காலிக வாடகை உதவித்தொகை வழங்க மேம்பாட்டாளர் ஒப்புக்கொண்டுள்ளார். இந்த உதவி, ஒப்புக்கொள்ளப்பட்ட விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டதாகும்.

மேலும், தகுதியுள்ள உரிமையாளர்களுக்கு 750 சதுர அடி பரப்பளவிலான வீடுகள் இலவசமாக வழங்கப்படவுள்ளன. தகுதி மற்றும் நிபந்தனைகளுக்கு ஏற்ப வாடகை–கொள்முதல் திட்ட வாய்ப்பும், ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு வாகன நிறுத்துமிடமும் திட்டமிடப்பட்டுள்ளன.

இத்திட்டத்தை முன்னெடுக்கப் பங்களித்த பினாங்கு முதலமைச்சர் சாவ் கொன் இயோவ், பாகான் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் குவான் எங், டத்தோ ஸ்ரீ சுந்தராஜூ, மாநில வீடமைப்பு வாரியம், வட செபராங் பிறை மாவட்ட மற்றும் நில அலுவலகம், உள்ளூர் சமூகக் குழுக்கள் மற்றும் குடியிருப்பாளர்களுக்குக் குமரன் நன்றி தெரிவித்தார்.

மறுமேம்பாட்டுத் திட்டம் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட அனைத்துத் தரப்பினரின் ஒத்துழைப்பும் தொடர்ச்சியான கண்காணிப்பும் அவசியம் என அவர் வலியுறுத்தினார். குடியிருப்பாளர்களின் உரிமைகளும் நலன்களும் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்யத் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!