
கோலாலம்பூர், நவ-02-பிரபல உள்ளூர் உணவு மற்றும் பானச் சங்கிலிகளான BananaBro, Boat Noodle ஆகியவற்றின் நிறுவனர் Tony Lim காலமானார். அவரது மறைவு குறித்த தகவலை இரு நிறுவனங்களும் தங்களது சமூக ஊடகங்கள் வழியாக அறிவித்துள்ளன.
மலேசியாவின் பாரம்பரிய வாழை இலை உணவை உலகளவில் அறிமுகப்படுத்த வேண்டும் என்ற தொலைநோக்குப் பார்வையுடன் செயல்பட்டு வந்த Limம்மின் பங்களிப்பை BananaBro நிறுவனம் தனது இரங்கல் செய்தியில் நினைவுகூர்ந்தது. “அவர் இப்போது நம்முடன் இல்லாவிட்டாலும், நாங்கள் பரிமாறும் ஒவ்வொரு வாழை இலை உணவிலும், அவர் வழங்கிய பங்களிப்புகளிலும் அவரது கனவு தொடர்ந்து வாழும். அவரது பேரார்வம் எங்களுக்கு உத்வேகம் அளித்ததுடன், பெருந்தன்மை எங்கள் மனங்களைத் தொட்டது. அவர் விட்டுச் சென்ற மரபு என்றும் நிலைத்திருக்கும்” என BananaBro குறிப்பிட்டது.
இவ்வேளையில், Lim ஒரு தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைவராகவும் வழிகாட்டியாகவும் திகழ்ந்ததுடன், தம்முடன் பணியாற்றியவர்கள் மீது முழு நம்பிக்கை வைத்து அந்த நிறுவனத்தை வளர்த்ததாக Boat Noodle தனது இரங்கல் செய்தியில் கூறியுள்ளது.
Lim, மலேசிய உணவு மற்றும் பானத் துறையில் தனது பயணத்தை 2014ஆம் ஆண்டு Boat Noodle நிறுவனத்தைத் தொடங்கியதன் மூலம் முன்னெடுத்தார். தாய்லாந்தின் அங்காடி உணவு வகையான படகு நூடுல்ஸைச் சிறிய கிண்ணங்களில் பரிமாறும் முறையை அறிமுகப்படுத்தியதன் மூலம் வாடிக்கையாளர்களிடையே தனித்துவமான வரவேற்பைப் பெற்றார். இதனைத் தொடர்ந்து, பாரம்பரிய வாழை இலை உணவுக்கு நவீன அணுகுமுறையை வழங்கும் நோக்கில் 2018ஆம் ஆண்டு BananaBroவைத் தொடங்கினார்.
தற்போது நாடு முழுவதும் 49 Boat Noodle விற்பனை நிலையங்களும், 40-க்கும் மேற்பட்ட BananaBro கிளைகளும் உள்ளன. மலேசிய உணவுத் துறையில் Lim உருவாக்கிய நிறுவனங்களும் விட்டுச் சென்ற பங்களிப்புகளும் அவரது தொழில் முனைவு மரபைத் தொடர்ந்து நினைவூட்டும்.



