Latestமலேசியா

வீடு ஒப்படைப்பதில் தாமதம், கட்டுமானத்திலும் குறைபாடு! அரசின் தலையீட்டை எதிர்பார்க்கும் சுங்கை பூலோ லாமான் பாயு வீடு வாங்குநர்கள்

சுங்கை பூலோவில் உள்ள Laman Bayu வீட்டுத் திட்டத்தில் வீடுகளை வாங்கியவர்கள், சாவிகள் ஒப்படைப்பதில் தாமதம், கட்டுமானக் குறைபாடுகள், நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள் மற்றும் தாமதத்திற்கான இழப்பீடு (LAD) மறுப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றனர். அப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண அரசாங்கமும் வீடமைப்பு மற்றும் ஊராட்சித்துறை அமைச்சும் (KPKT) உடனடியாகத் தலையிட வேண்டும் என கடும் அதிருப்தி அடைந்துள்ள அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த 2023ஆம் ஆண்டு மே 19ஆம் தேதி செய்து கொண்ட விற்பனை ஒப்பந்தத்தின்படி, 36 மாதங்களுக்குள், அதாவது 2026ஆம் ஆண்டு மே 19ஆம் தேதிக்குள் வீட்டின் சாவிகள் ஒப்படைக்கப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால், இணக்கச் சான்றிதழ் (CCC) இன்னும் கிடைக்கவில்லை எனக் கூறி மேம்பாட்டாளர்கள் சாவிகளை வழங்குவதைத் தாமதப்படுத்தி வருவதாக பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரான ஷினி தெரிவித்தார். தாமதத்திற்கான LAD இழப்பீடு கோரியபோது, KPKT கால அவகாச நீட்டிப்புக்கு அனுமதி வழங்கியுள்ளதாக மேம்பாட்டாளர் தரப்பு கூறியதாகவும், ஆனால் அமைச்சு அத்தகைய கடிதம் எதையும் வழங்கவில்லை என அதிகாரிகள் தங்களிடம் தெரிவித்ததாகவும் அவர் கூறினார்.

இவ்வேளையில், வீட்டுத் திட்டத்துக்குப் பின்னால் இடுகாடு இருப்பது குறித்து முன்கூட்டியே தெரிவிக்கப்படவில்லை என்றும், ஒப்பந்தம் செய்த பின்னரே தெரிய வந்ததாகவும் மற்றொரு பெண் குற்றம் சாட்டினார். இதனால் வீடுகளை வாங்க மறுத்த சிலர் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டதாகவும் தங்களது மனக்குமுறலையும் வெளிப்படுத்தினர்.

விற்பனை முகவர்கள் குளிர்சாதன வசதி, உடற்பயிற்சிக் கூடம் மற்றும் இலவச தளவாடங்கள் உள்ளிட்ட பல சலுகைகளை உறுதியளித்ததாகவும், அவை இதுவரை நிறைவேற்றப்படவில்லை என்றும் வீடு வாங்கியவர்கள் தெரிவித்தனர். கட்டி முடிக்கப்பட்டதாகக் கூறப்படும் வீடுகளிலும் சுவர்களில் விரிசல், தரைப் பழுதுகள், உடைந்த கண்ணாடிகள் போன்ற குறைபாடுகள் காணப்படுவதாகவும் அவர்கள் சுட்டிக் காட்டினர். வீட்டைச் சுற்றியுள்ள பகுதிகளில் புதர்கள் மண்டிக் கிடப்பதுடன், மின்தூக்கியும் முழுமையாகச் செயல்படாததால், குறிப்பாக முதியவர்கள் சிரமங்களை எதிர்கொள்வதாகவும் அவர்கள் கூறினர்.

வீடுகளை ஒப்படைப்பதில் ஏற்பட்டுள்ள தாமதம், கட்டுமானக் குறைபாடுகள், வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாதது மற்றும் LAD இழப்பீடு மறுக்கப்படுவது தொடர்பில் மேம்பாட்டாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தங்களுக்குச் சட்டப்படி கிடைக்க வேண்டிய உரிமைகளையும் நீதியையும் உறுதிப்படுத்த KPKTயும் அரசாங்கமும் நேரடியாகத் தலையிட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!