
கோலாலம்பூர், நவம்பர் 13 – கடைகளில் பணியாற்றும் முஸ்லிம் ஊழியர்கள் மது விற்பனையில் ஈடுபடுவதைத் தவிர்க்கும் வகையில் புதிய வழிகாட்டுதல்களை அறிமுகப்படுத்துவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.
சமய விவகார அமைச்சர் ஸுல்கிஃப்லி ஹசான் (Zulkifli Hasan) இதனைத் தெரிவித்தார்.
இது தொடர்பாக, ஜாக்கிம் (Jakim), உள்ளாட்சி மன்றங்கள், தொழிலாளர் துறை, சட்டத்துறைத் தலைவர் அலுவலகம் மற்றும் மனிதவள அமைச்சு ஆகியவற்றுடன் கலந்துரையாடப்பட்டு வருவதாக அவர் கூறினார்.
இதன்படி, முஸ்லிம் ஊழியர்களுக்கு மாற்றுப் பணிகளை வழங்குவது அல்லது மது விற்பனைக்குத் தனி பணம் செலுத்தும் கவுன்டர்களை அமைப்பது ஆகியவை பரிசீலிக்கப்படுகின்றன.
மேலும், மாநில இஸ்லாமிய சமயத் துறைகள் உள்ளிட்ட தொடர்புடைய அமைப்புகளுடன் கூடுதல் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்ட பின்னரே இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும், புதிய வழிகாட்டுதல்கள் நடைமுறைக்கு வரும் தேதி இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.



