
சபா, நவம்பர் 16 – சபா ரனாவ் (Ranau), கம்போங் தினானோம் (Kampung Tinanom) பகுதியில் ஆற்றில் மீன் மற்றும் தவளைகளைப் பிடிக்கச் சென்ற 15 வயது சிறுமி, வீட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியால் சுடப்பட்டு படுகாயமடைந்தார்.
கடந்த சனிக்கிழமை இரவு 10 மணியளவில், வேட்டைக்குச் சென்ற 40 வயது ஆடவர் ஒருவர், சிறுமியைக் காட்டுப் புள்ளிமான் எனத் தவறாக நினைத்து துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
இதில் சிறுமியின் உடலின் பல்வேறு பகுதிகளில் 13 காயங்கள் ஏற்பட்டன. இடது மணிக்கட்டிலும் எலும்பு முறிவு ஏற்பட்டது.
சிறுமி முதலில் ரனாவ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக கோத்தா கினபாலுவிலுள்ள குயின் எலிசபெத் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். தற்போது அவர் தீவிர சிகிச்சையில் உள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக சிறுமியின் உறவினரான 40 வயது ஆடவரைப் போலீசார் கைது செய்துள்ளனர். சம்பவத்துக்குப் பிறகு அவர் துப்பாக்கியைக் காட்டுக்குள் வீசியதாக நம்பப்படுவதால், அதனைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது.



